Published : 22 Jun 2019 04:09 PM
Last Updated : 22 Jun 2019 04:09 PM

தேசிய கல்விக் கொள்கை வரைவு ஆவணத்தில் உள்ள அபாயங்கள்: பட்டியலிட்ட கல்வியாளர்கள்

தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு ஆவணத்தில் உள்ள அபாயங்கள் தொடர்பான மாநில அளவிலான கருந்தரங்கம் இன்று (சனிக்கிழமை) எழும்பூர் இக்சா மையத்தில் நடந்தது.

இதில் கருத்தாளர்களாக  முனைவர் வசந்தி தேவி , ஆழி செந்தில் நாதன், அருள்மொழி, விழியன் முதலானவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கில் கலந்தாலோசிக்கப்பட்ட முக்கியக் கருத்துகள்:

* பள்ளிக் கல்வியில் மிகப் பெரிய மாற்றமாக 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 வயது முதல் 18 வரை 15 ஆண்டுகால பள்ளிக் கல்வியை இக்கொள்கை வரைவு முன் வைக்கிறது. இது கற்றலுக்கான சம வாய்ப்பை ஏற்படுத்தாமல் குழந்தைகள் தாங்களாகவே பள்ளிக் கல்வி முறையை விட்டு வெளியேற வழி செய்யும்.

* தற்போது 5 வயது முடிந்த பின் முதல் வகுப்பில் இருந்துதான் முறையான பள்ளிக் கல்வி தொடங்குகிறது. இனி 3 வயதிலிருந்தே முறையன கல்வி தொடங்கும். இதுகுறித்த பரந்த விவாதம் தேவை.

* தேர்வு என்பதே குழந்தைகள் உள்ளத்தில் அச்சத்தை உண்டாக்கும் நிலையில் 3 ஆம், 5 ஆம், 8 ஆம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருப்பது குழந்தைகள் பள்ளிக் கல்வி முறையைவிட்டு வெளியேற வழிவகுக்கும்.

* பள்ளியில் 15 வருடங்கள் பயின்று மேல்நிலைப் பள்ளிக் கல்வி சான்று பெற்றாலும் கல்லூரியில் சேர அது தகுதியாக கருதப்படமாட்டது.

* தேர்வு முகமை நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரி சேர்க்கை நடைபெறும்.

* தற்போது மருத்துவக் கல்வியில் பயில  நீட் போன்று பி.ஏ., பிஎஸ்சி உட்பட எந்தப் படிப்பிற்கும் ஒரு தேசியத் தகுதிக்கான தேர்வு உண்டு.

 * நீட் மருத்துவக் கல்வி முடிந்த பின்பு எக்ஸிட் எழுதி அதில் தேர்ச்சி பெற்ற பின் தான் மருத்துவராக பணியாற்ற முடியும்.

* ஆறு வயதிலிருந்து குழந்தைகள் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்க வேண்டுமா. அவ்வாறு இருப்பின் பிற பாடங்களை எப்படி கற்க முடியும்.

* 15 வருட பள்ளிப் படிப்பில் அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்றுமொழி ஏதுவாக இருக்க வேண்டும் என்ற தெளிவு இல்லை.

* தமிழ்நாட்டில் உயிர்நாடியான அரசு பின்பற்றி வரும் 69% இட ஒதுக்கீடு இனிமேல் பின்பற்றப்பட உத்தரவு இல்லை.

* பேச்சு வழக்கில் இல்லாத மதம் சம்பந்தப்பட்ட சமஸ்கிருதத்தை கற்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பிற இந்திய மக்கள் பேசும் மொழிகளின் வளர்ச்சி புறக்கணிக்கப்படும்.

இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x