

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இ-மெயில் மற்றும் சமூக வலை தளங்கள், தமிழகத்தில் நடைபெறும் சைபர் குற்றங்கள் தொடர்பான தகவல்களை தருவதற்கு, அந்த நாட்டு சட்டத்தைக் கூறி மறுப்ப தாக உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் சிபிசிஐடி-யினர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த திரு மணமான 35 வயது பெண் ஒருவர், தன்னை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக சார்பு ஆய்வாளர் ஒருவரது மகன் மீது புகார் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என். கிருபாகரன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பெரும்பாலான இ-மெயில் சேவை நிறுவனங்கள், சமூக வலைதள நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்துதான் சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் காவல்துறை கோரும் தகவல்களை, தங்கள் நாட்டு சட்டத்தை காரணமாக காட்டியோ, காலதாமதத்தை காரணம் காட்டியோ தர மறுப்பதால் விசாரணை பாதிக்கப்படுகிறது.
சைபர் குற்றங்களை விரைவில் கண்டுபிடிக்க, தமிழகத்தில் 6 மாநகர் காவல் ஆணையர் அலுவல கங்களில் சிபிசிஐடி சைபர் சோதனை வசதியை பலப்படுத்தவும், தேவையான ஹார்டுவேர், சாப்ட்வேர்களை வாங்கவும் தமிழக அரசு மே மாதம் ரூ.1.09 கோடி ஒதுக்கியுள்ளது.
சென்னையில் மட்டும் 2004-ம் ஆண்டில் இருந்து இதுவரை சைபர் குற்றங்கள் தொடர்பாக 655 புகார்கள் பெறப்பட்டன. அதில் 33 புகார்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகும். இவற்றில் 101 புகார்களின் பேரில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக, கடந்த 10 ஆண்டுகளில் சைபர் குற்றப் பிரிவுக்கு வரப்பெற்ற புகார்கள் மற்றும் அந்தப் புகார்களின் விவரங்கள் குறித்து செப். 22-ல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.