

இன்றைய தலைமுறையாவது இந்தி கற்கட்டும் என, புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்து கிருஷ்ணசாமி பேசியதாவது:
"ஆங்கில மொழியைத் தவிர்த்து, இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களிடம் தொடர்புகொள்ள உதவும் இந்தி மொழியைக் கற்பதற்கான வாய்ப்பு முன்பு வழங்கப்படவில்லை. இப்பொழுது, திணிக்கப்படாமல் விருப்பத்தின் அடிப்படையில் இந்தியைத் தேர்ந்தெடுத்து படிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதை நழுவவிடாமல், தமிழகம் பயன்படுத்தி கிராமப்புற, ஏழை, எளிய, அரசுப்பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களும், இந்தி மொழியை இலவசமாக, அரசின் மூலமாகவே கற்றுக்கொள்வதற்கு உண்டான இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.
தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானது. தமிழ்மொழியை இன்னொரு மொழியாலோ, வேறு யாராலும் அழிக்க முடியாது. இங்கிருந்து பலர் தொழில் நிமித்தமாக, இரண்டு, மூன்று தலைமுறைகளாக அமெரிக்காவில் குடிபெயர்ந்திருக்கின்றனர். இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் இருக்கின்றனர். யாரும் தமிழ் மொழியை மறந்துவிடவில்லை. தமிழ்ப் பண்பாட்டையும் அவர்கள் மறக்கவில்லை.
உலகில் ஒவ்வொரு நாடும், தங்கள் அளவுக்கு பொருளாதாரத்தை சுருக்கிக்கொண்டு வரும் வேளையில், தமிழர்களுடைய பெருமைகளும், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட பல தளங்களிலும், தங்களை விரிவுபடுத்திக் கொள்வதற்கு ஏதுவாக, இன்றைய தலைமுறையாவது இந்தியை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை தமிழகம் உருவாக்கித் தர வேண்டும்.
ஏற்கெனவே, தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள், சர்வதேச பாடத்திட்டத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது அல்லது, கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இப்போது, இந்தியைத் தான் கட்டாயம் கற்க வேண்டும் என்ற சூழல் இல்லை. ஆனால், இந்தியை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்போது அதை ஏன் நிராகரிக்க வேண்டும்? இதனால், தமிழுக்கு எந்தவிதமான குந்தகமும் வந்துவிடப் போவதில்லை".
இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.