

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையில் மும்மொழிக்கொள்கை கட்டாயம் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்கிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தியும், இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு போன்ற மாநில மொழிகளையும் படிக்க வேண்டும் என இந்த வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகளுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், ‘‘எந்த மொழியும், எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது’’ என முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும், ‘‘இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’’ என புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்கும் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்விக் குழுவின் வரைவை முன் எடுத்துச் செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’ என கூறியுள்ளார்.
தமிழகத்தைப் போன்று கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களிலும், மேற்குவங்கத்திலும் இந்திக்கு எதிராக ஆட்சேப குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, திருத்தப்பட்ட வரைவு கல்விக்கொள்கை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்திதான் படிக்க வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்து வேறு மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.