

மத்திய அரசின் மும்மொழிக்கொள்கைக்கு எதிராக நெட்டிசன்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். #StopHindiImposition என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு இந்தியா முழுதும் முதல்இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மத்திய அரசு, புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்கான வரைவைத் தயாரிக்கும் பணியில் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்த பணிகள் முடிவடைந்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் புதிய கல்விக் கொள்கை வரைவு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக https://mhrd.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு சரத்தாக மும்மொழிக்கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில், கட்டாயம் மூன்றாவது மொழியாக இந்தியை இணைக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்தை ஜூன் 30 வரை தெரிவிக்கலாம் என்பக்கூறப்பட்டுள்ளது.
இருமொழி கொள்கை உடைய தமிழ்நாட்டில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் ட்விட்டரில் நெட்டிசன்கள் இந்தி திணிப்புக்கு எதிராக புது ஹாஷ்டேக் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
#StopHindiImposition என்ற ஹாஷ்டேக் இந்தியா முழுதும் ட்ரெண்டில்முதலிடத்தில் உள்ளது. 55 ஆயிரம் நெட்டிசன்கள் இதை ஷேர் செய்துள்ளனர். #TNAgainstHindiImpositionஎன்ற ஹாஷ்டேக்கும் மூன்றாம் இடத்தில் உள்ளது. உலக அளவில்நான்காம் இடத்திலும் #StopHindiImposition ட்ரெண்டாகி உள்ளது.