Published : 18 Jun 2019 09:31 PM
Last Updated : 18 Jun 2019 09:31 PM

எங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

எங்காவது பிரச்சினை என்றால் குடிநீர் பிரச்சினை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை தயவுசெய்து ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் வெளியிட வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை, மெரினா கடற்கரையில், ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.

பிறகு, தண்ணீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''நேற்றைய தினம் உள்ளாட்சித் துறை அமைச்சர் அனைத்து அதிகாரிகளையும் அழைத்து குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்டான வழிகளை ஆலோசித்து, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்கு தெரியும்.

கடுமையான வறட்சி மற்றும் நமக்குக் கிடைக்க வேண்டிய பருவமழை போதிய அளவு பொழியாத காரணத்தினால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ, அங்கெல்லாம், குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகள் மூலமாக மக்களுக்குத் தேவையான குடிநீர் லாரிகள் மூலமாகத் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர் குறைந்துவிட்ட காரணத்தினால், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நீரையே, குடிப்பதற்கும், துவைப்பதற்கும் மற்றும் எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் இந்த குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும், அவர்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அக்டோபர், நவம்பர் மாதத்தில் தான் பருவமழை தொடங்குவதால், அதுவரை இருக்கின்ற தண்ணீரை வைத்து சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதற்கேற்றாற்போல், இன்றைக்கு நிலத்தடி நீரை எடுத்து மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருக்கிறோம்.

அதுபோல, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் போதிய அளவிற்கு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்தருணத்தில், பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனென்று சொன்னால், மூன்று, நான்கு மாதங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துத் தான் மக்களுக்கு குடிநீராக வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம்.

ஆகவே, இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் அரசுக்குத் துணை நிற்க வேண்டும். ஏதோவொரு இடத்தில் ஒரு பிரச்சினை என்றால் அதை பெரிதுபடுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு குடிநீர் பிரச்சினை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை தயவுசெய்து ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் வெளியிட வேண்டாம் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

எந்த அளவிற்கு தமிழகத்தில் மழை பொய்த்திருக்கிறதென்று உங்கள் அத்தனைபேருக்கும் தெரியும். இயற்கை பொய்த்துப்போய் விட்டதால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகள் எல்லாம் வறண்டு போய் விட்டன. நமக்குக் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரில் 2 டிஎம்சி தான் கொடுத்தார்கள்.

கண்டலேறு அணையில் 8 டிஎம்சி தண்ணீர் இருந்தால்தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியும். இதுவரை 4 டிஎம்சி தண்ணீர் தான் அங்குள்ளது. எனவே, அங்கிருந்தும் மக்களுக்கு தண்ணீர்  தர முடியாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது.

இருந்தாலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டு, வீராணம் ஏரியை நிரப்பி அதன்மூலமாக தண்ணீரைப் போதிய அளவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும், குடிநீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் அதனைத் தீர்த்து வைப்பதற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பித்து, அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கி, முறையாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x