புதியகல்விக் கொள்கை வரைவு திட்டம்: ஜூன்.30 வரை பொதுமக்கள் கருத்துக்கேட்பு

புதியகல்விக் கொள்கை வரைவு திட்டம்: ஜூன்.30 வரை பொதுமக்கள் கருத்துக்கேட்பு
Updated on
2 min read

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டம் வெளியிடப்பட்டு பொதுமக்கள் கருத்தை ஜூன் 30 வரை தெரிவிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2014-ம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய அரசின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் குழு ஒன்று அமைத்தது.

டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு 2016-ல் தனது வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இதன்படி புதிய கல்விக் கொள்கையில் பல மாற்றங்களை புகுத்துவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன. பல்கலைக்கழகக் கட்டுமானங்களில் மாற்றம் செய்தல், பல்கலைக்கழக ஆட்சிமன்றங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெறச் செய்தல், உயர்கல்வி பாடத் திட்டங்களைக் கல்வியாளர்கள் தீர்மானிப்பதை நிறுத்திவிட்டு சந்தைக்கு ஏற்ப கல்விமுறை என்ற வகையில் தனியாரிடம் ஒப்படைத்தல் போன்றத் திருத்தங்களைச் செயல்படுத்த பரிந்துரைத்தது.

டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு புதிய கல்விக் கொள்கைகளை வடிவமைத்திட வழங்கிய வரைவு அறிக்கைக்கு கல்வியாளர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கருத்துக் கூறி வந்த நிலையில், 2017 ஜூன் 26-ல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட இன்னொரு குழு ஒன்றை அமைத்தது.

தேசியக் கல்விக்கொள்கையை வடிமைக்க அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழுவில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.ஜே.அல்போன்ஸ் கன்னம்தானம், முன்னாள் துணைவேந்தர் ராம்சங்கர் குரீல், எம்.கே.ஸ்ரீதர், மொழியியல் அறிஞர் டி.வி.கட்டிமணி, கவுஹாத்தி பேராசிரியர் மஸார் ஆசிஃப், உத்திரப் பிரதேச கல்வித்துறை முன்னாள் இயக்குநர் கிஷன் மோகன் திரிபாதி, கணிதவியல் மேதை மஞ்சள் பார்கவா, முன்னாள் துணைவேந்தர் வசுதா காமத் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

இரண்டாவது முறையாக மத்திய அரசு பொறுப்பேற்றவுடன், கஸ்தூரி ரங்கன் குழு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்தது.

பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக https://mhrd.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளவும் மும்மொழிக்கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பரிந்துரைகள் பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும், பள்ளிக்கல்வியை வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு ஒழுங்குமுறைகள், மாணவர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் தேர்வுகள் எழுதலாம்; மதிப்பெண்களை உயர்த்த மறுதேர்வு எழுதலாம் பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும், யோகா, நீர்மேலாண்மை உள்ளிட்டவற்றையும் பாடமாக்க வேண்டும் என்கிற சரத்துகள் உள்ளது.

அதே நேரம் ஒரே ஒரு ஷரத்து பல்வேறு சர்ச்சையை தமிழகத்தில் கிளப்பி உள்ளது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம்,  இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தி பேசாத மாநிலங்களில், கட்டாயம் மூன்றாவது மொழியாக இந்தியை இணைக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

புதிய கல்விக்கொள்கை வரைவு மீது ஜூன் 30-ம் தேதி வரை, nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in