Published : 12 Jun 2019 04:26 PM
Last Updated : 12 Jun 2019 04:26 PM

காவிரி விவகாரம்: பதவி நாற்காலியை இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே முதல்வர் பழனிசாமி கவனம் செலுத்துகிறார்; தினகரன் விமர்சனம்

முதல்வர் பழனிசாமி காவிரி தண்ணீர் பெறுவது பற்றி இதுவரை ஒருவார்த்தை கூட பேசாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மேட்டூர் அணையைத் திறப்பதற்குத் தண்ணீர்  இல்லாத நிலையில், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறுவதற்கு துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் தமிழக அரசு மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது.

பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது மரபு. அதன்படி இன்று அணையைத் திறப்பதற்குப் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை. தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் அம்மாநிலம் வழக்கம் போலவே சண்டித்தனம் செய்கிறது.

இதனால் மேட்டூர் அணை மூலம் பாசனம் பெறும் டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தண்ணீர் இன்றி சாகுபடிப் பணிகளை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து நிற்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் வீராணம் குடிநீரைப் பெறும் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், காவிரி நீரைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்தி வருகிறார்.

காவிரி ஆணைய உத்தரவுப்படி தண்ணீர்  திறந்துவிட கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமருக்கு ஒரு கடிதம் கூட தமிழக அரசு இதுவரை எழுதியதாகத் தெரியவில்லை. காவிரி தண்ணீர் பெறுவது பற்றி இதுவரை ஒருவார்த்தை கூட அவர் பேசாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

டெல்லியில் முகாமிட்ட அமைச்சர்களும் காவிரியில் தண்ணீர் கேட்டு யாரையும் வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. சுயலாபத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

தண்ணீர் வாங்கிக் கொடுத்து விவசாயத்தைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக வேளாண்மையை அழித்திடும் எண்ணெய்க்குழாய் - எரிவாயுக்குழாய்கள் பதித்தல், எட்டுவழிச்சாலை போடுதல், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்கள் விரோத பழனிசாமி அரசு பன்மடங்கு வேகம் காட்டிவருகிறது.

அதனால்தான் 'அணைகளில் தேக்கி வைக்க முடியாமல் நிரம்பி வழிந்து ஓடினால் மட்டுமே தமிழ்நாட்டுக்குத் தருவோம்' என்று சொல்லி மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே காவிரி பிரச்சினையைக் கர்நாடகா கொண்டு செல்ல நினைக்கிறது. இதனை மத்திய அரசும், தமிழக அரசும் இனிமேலும் வேடிக்கை பார்க்கக் கூடாது.

'காவிரி தண்ணீரில் தமிழ்நாட்டின் பங்கு என்பது மரபு வழிப்பட்ட உரிமை' என்ற அடிப்படையில் வறட்சிக் காலத்திற்குரிய நீர்ப்பகிர்வு வழிமுறைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x