Published : 03 Jun 2019 03:35 PM
Last Updated : 03 Jun 2019 03:35 PM

இந்தி கட்டாயமில்லை: கருணாநிதி வாழ்கிறார்; ஸ்டாலின்

ஆதிக்க இந்தித் திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னைத் தமிழைக் காப்போம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முந்தைய மத்திய பாஜக அரசு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை சமீபத்தில் பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டது.

மும்மொழிக் கொள்கையைப் பரிந்துரைத்துள்ள அந்த அறிக்கையில், இந்தி பேசும் மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் பிறமொழி ஒன்றைக் கற்பிக்கவும், இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்பிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், இந்தி மொழி வலிந்து திணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கொட்டையன் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை கட்டாயமில்லை எனவும், அதாவது, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமில்லை என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று (ஜூன் 3) இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், "தலைவர் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கருணாநிதி வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது. ஆதிக்க இந்தித் திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னைத் தமிழைக் காப்போம்!" என, மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x