பொருளாதாரச் சிக்கலால் ஸ்பெயின், தாய்லாந்து என்று தொடர்ந்து வாய்ப்புகளை இழக்கும் தேனி கால்பந்து வீரர்: கைகூடுமா ஜோர்டான் போட்டி?

பொருளாதாரச் சிக்கலால் ஸ்பெயின், தாய்லாந்து என்று தொடர்ந்து வாய்ப்புகளை இழக்கும் தேனி கால்பந்து வீரர்: கைகூடுமா ஜோர்டான் போட்டி?
Updated on
2 min read

ஜோர்டானில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்துப் போட்டிக்கு தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த பாலமுருகன் தேர்வு பெற்றுள்ளார்.

பொருளாதார சிக்கலால் ஏற்கனவே ஸ்பெயின், தாய்லாந்து வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில் இந்த போட்டியிலாவது பங்கேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்தவர் பாலமுருகன்(26). பிறவியிலே இடக்கை வளர்ச்சியில்லாமல் தோள்பட்டையுடன் நின்றுவிட்டது. இது குறித்த கேலிப்பார்வையை தவிர்க்கும் நோக்கில் விளையாட்டுக்களின் பக்கம் கவனத்தைத் திருப்பினார். ஆரம்பத்தில் கோகோ, ஓட்டம் என்று இலக்கில்லாமல் விளையாண்டு கொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில் இவரது உறவினர் நாகராஜ் உடற்கல்வி இயக்குநர் என்பதால் கால்அமைப்பு, உடல் வேகம் போன்றவற்றை மதிப்பிட்டு கால்பந்து விளையாடினால் உச்சம் தொடலாம் என்று வழிநடத்தியுள்ளார்.

அன்றுமுதல் கால்பந்தில் அதிக கவனம் செலுத்தத் துவங்கினார். ஆசிரியர் பயிற்சி, பிஏ.ஆங்கிலம் படித்து விட்டு அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் இப்பள்ளி 21ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது.

தொடர்ந்து கோட்டை கால்பந்து கழகம் என்று உருவாக்கி ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார். மூணாறு சைலண்ட்வேலி என்ற இடத்தில் மாநிலங்களுக்கு இடையே  நடைபெற்ற போட்டியில் இவரது அணி முதலிடம் பெற்றது.

கை குறைபாடே தெரியாத அளவிற்கு நார்மலான வீரர்களுடன் இவர் களத்தில் இறங்கி விளையாடும் உத்வேகம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சேலத்தில் உள்ள கால்பந்து விளையாட்டு அகாடமி மூலம் தமிழக மாற்றுத்திறனாளிகள் கால்பந்து அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2017 கோவாவில் தேசிய அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் இவர் கேப்டனாகவும் கலந்து கொண்டார். இந்த அணி இரண்டாம் இடம் பெற்றது. தொடர்ந்து பீகார், நோபாள், தெற்காசியப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இவரது விளையாட்டுத்திறனை அறிந்து தற்போது ஜோர்டானில் நடைபெற உள்ள சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கால்பந்துப் போட்டியில் இவரது பெயரை இந்திய கால்பந்து மாற்றுத்திறனாளிகள் பிரிவு அமைப்பு(ஐஎப்சிபிஎப்) தேர்வு  செய்துள்ளது.

ஆனால் அங்கு செல்ல போதிய நிதிவசதி இல்லாததால் பரிதவிப்பில் நாட்களை நகர்த்தி வருகிறார். ஏற்கனவே பணப்பிரச்னையால் 2018ல் ஸ்பெயின் நடைபற்ற போட்டி, கடந்த ஜனவரியில் தாய்லாந்துவில் நடைபெற்ற போட்டிகளில் இவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

இது குறித்து பாலமுருகன் கூறுகையில், "சிறுவயதிலே எனது தந்தை குடும்பத்தை விட்டு விலகிச் சென்று விட்டார். 2அக்கா, ஒரு தங்கை. அம்மா கூலி வேலை செய்கிறார்.

குடும்பத்திற்கு அம்மா, தங்கையின் வருமானம் மட்டும்தான். இந்நிலையில் எனது ஆர்வத்தினால் கால்பந்தில் படிப்படியாக உயர்ந்தேன். ஆனால் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டும் பங்கேற்க முடியவில்லை.

2020-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு ஜோர்டான் போட்டி பங்கேற்பு உறுதுணையாக இருக்கும். இருந்தாலும் பொருளாதாரச் சிக்கலால் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in