Published : 04 Jun 2019 12:00 AM
Last Updated : 04 Jun 2019 12:00 AM

போலந்தில் விண்வெளி பயிற்சிக்கு தேனி பள்ளி மாணவி தேர்வு: ‘இஸ்ரோ’ விஞ்ஞானியாக விண்வெளி செல்ல விருப்பம்

தேனியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள விண்வெளி ஆய்வு பயிற்சிக்குத் தேர்வாகி உள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து இவர் ஒருவர் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு தேர்வாகி உள்ளார்.

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். ஓவியர். இவரது மகள் உதய கீர்த்திகா. அல்லிநகரம் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மீதான ஈர்ப்பால், இவருக்கு சிறு வயது முதலே, விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது லட்சியம்.

உக்ரைனில் ‘கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் யூனிவர்சிட்டி’யில் 4 ஆண்டுகள் ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் படிப்பை இந்த மாதம் நிறைவு செய்கிறார். 92.5 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது போலந்து நாட்டின் Analog Astronaut Training Center-ல் ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறவும், அவர்களுடன் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உதய கீர்த்திகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் 20 மாணவர்கள் இப்பயிற்சிக்கு தேர்வாகி உள்ளனர்.

இந்தியாவில் இருந்து உதயகீர்த்திகா மட்டுமே இப்பயிற்சியில் பங்கேற்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து,தமிழ் வழிக்கல்வியில் படித்து விண்வெளி ஆராய்ச்சிகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் அதற்கான பயிற்சியும், ஆராய்ச்சியும் மேற்கொள்ளச் செல்லும் உதய கீர்த்திகாவை பலர் வாழ்த்தினர்.

இதுகுறித்து உதய கீர்த்திகா கூறியதாவது: இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் விண்வெளிக்கு சென்றுள்ளனர். ஒருவர் மறைந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா. இன்னொருவர் சுனிதா வில்லியம்ஸ். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி சென்றுள்ளனர்.

ஆனால், நான் இஸ்ரோவில் இருந்து முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வீராங்கனையாக விண்வெளி செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ளேன். மகேந்திரகிரியில் இஸ்ரோ சார்பில், கடந்த 2012-ம் ஆண்டில் நடந்த விண்வெளி ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசும், பிளஸ் 2 படிக்கும்போது 2014-ல் முதல் பரிசும் பெற்றேன். இருமுறை பரிசு பெற்றபோது விண்வெளி ஆராய்ச்சிக்கு முயற்சிக்கும்படி பலரும் ஊக்கப்படுத்தினர்.

2021-ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதில்,நானும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x