

பருவமழை பொய்த்ததால் மட்டுமே தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த நெம்மேலியில் ரூ.1700 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் 2-வது ஆலைக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பூமிபூஜையுடன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. முன்னதாக முதல்வர் நெம்மேலி திட்டத்தின் 2-வது ஆலை அமைவது தொடர்பான கல்வெட்டை முதல்வர் திறந்துவைத்தார்.
விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, "நெம்மேலி 2-வது ஆலை பணி 2021-ல் குடிநீர் விநியோகம் தொடங்கும்.
இதனால் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். மத்திய மற்றும் தென் சென்னையில் உள்ள சுமார் 9 லட்சம் மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
பருவமழை பொய்த்ததால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியவில்லை. மழை சரியாக பெய்திருந்தால் ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும். நிலத்தடி நீரும் வளம் பெற்றிருக்கும்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் ஏற்படாது. அதனால், வறட்சி பாதித்த பிற கடலோர மாவட்டங்களிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்காக எந்தெந்த பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.
இதுதவிர பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.6078 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2 வாரத்தில் செயல்படுத்தப்படும்.
தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இனிவருங்காலங்களில் பெரிய தொழிற்சாலைகள், குடியிருப்புகளுக்கு கழிவுநீர் மறுசுழற்சி அமைப்பு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து ஏற்படுத்தப்படும்.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. தமிழகத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் ஏற்கப்படாது. தமிழகத்துக்கு சாதகமான திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்" என்றார்.