

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 மணி நேரம் மின்தடையால் விபத்தில் காயமடைந் தவர்களுக்கு மொபைல் போன் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின் விநியோகம் செய்ய தனி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை பகுதியில் சூறாவளி யுடன் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் மாலை 5.30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, மகப்பேறு மற்றும் குழந்தை நலப் பிரிவுகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டது.
இரவு 7.30 மணிக்கு மின் விநியோகம் சீரானது. ஆனால் மருத்துவமனையில் ஜெனரேட்டர் மின்சாரத்தில் இருந்து நேரடி மின்சாரத்துக்கு மாற்றியபோது பேனல் பழுதானது. அதை மின் ஊழியரால் சரிசெய்ய முடியவில்லை. இதனால் இரவு 9.30 மணி வரை மின்தடை நீடித்தது.
விபத்தில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தவர்களை மருத்துவர்கள் மொபைல் போன் வெளிச்சத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து மதுரைக்கு அனுப்பினர். அறுவை சிகிச்சை செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளி களும், உறவினர்களும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆட்சியர், வேறு மின் ஊழியர் மூலம் மின்விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து 4 மணி நேரம் கழித்து மின்விநியோகம் சீரானது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கூறுகையில், அரசு மருத்துவமனையில் இது போன்ற சம்பவங்கள் இனி மேல் நடைபெறாமல் இருக்க பொதுப்பணித் துறை, மருத்து வமனை அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளேன் என்றார்.டயர் பஞ்சர்
இதுகுறித்து மருத்துவமனை பணியாளர் ஒருவர் கூறுகையில், மருத்துவமனையில் நேற்று ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மின் ஊழியர் இருந்தார். அவருக்கு முறையாக வேலை தெரியவில்லை. நிரந்தரப் பணியாளர் பணி முடிந்து வெளியூர் சென்றுவிட்டார். அவருக்கு தகவல் தெரிவித்து, மோட்டார் சைக்கிளில் வந்தபோது டயர் பஞ்சர் ஆனது. இதனால் மின்விநியோகத்தை சீர் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்றார்.