Last Updated : 23 Jun, 2019 12:00 AM

 

Published : 23 Jun 2019 12:00 AM
Last Updated : 23 Jun 2019 12:00 AM

அங்கன்வாடிகளுக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர்களின் பணியிடங்களை கூடுதல் இடமாக காட்ட அரசு உத்தரவு: நீதிமன்ற வாக்குறுதிக்கு மாறாக கல்வித் துறை செயல்படுவதாக குற்றச்சாட்டு

அங்கன்வாடிகளுக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர்களின் பணியிடங்களை கூடுதல் பணியிடமாக காட்ட தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. நீதிமன்ற வாக்குறுதிக்கு மாறாக கல்வித்துறை செயல்படுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் 27,193 ஆரம்பப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 32 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். 1.12 லட்சம் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் கடந்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்த அரசு, அரசு உதவி தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டனர். இதை எதிர்த்து ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து மழலையர் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணிமாறுதல் செய்து தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் அங்கன்வாடிகளுக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை கூடுதல் பணியிடமாகக் காண்பிக்க தொடக்கக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு உதவிப் பள்ளிகளுக்கு ஆதரவாக கல்வித் துறை செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அங்கன்வாடிக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:இந்த விவகாரத்தில் கல்வித்துறை பல முறைகேடுகளை செய்து வருகிறது. மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களைத்தான் நியமனம் செய்திருக்க வேண்டும். ஆனால், விதிகளுக்கு முரணாக இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்து அங்கன்வாடிகளுக்கு இடமாற்றம் செய்தனர்.

இதுதொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, ‘அரசு ஆரம்பப் பள்ளிகளில் 1,946 மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5478 ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவர்களுக்காக ஆண்டுதோறும் ரூ.400 கோடி வரை செலவாகிறது. எனவே, ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்கிறோம்.

தேவை இருப்பின் மீண்டும் அவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள்’ என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுத்தான் நீதிமன்றமும் எங்கள் வழக்குகளை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வுக்காக காலி மற்றும் உபரி பணியிட விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற தொடக்கக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மழலையர் வகுப்புகளுக்கு அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அந்த பள்ளிகளுக்கு தலா ஒரு கூடுதல் பணியிடம் தேவை என பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே உபரியாக உள்ள ஆசிரியர்கள்தான் அங்கன்வாடிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, புதிதாக பணியிடத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும் இடமாற்றப்பட்ட ஆசிரியர்களைதான் திரும்பப் பணிக்கு அழைக்க வேண்டும். மாறாக இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மேலும், இந்த நடைமுறை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும்தான். அரசுப் பள்ளிகளுக்கு கிடையாது. இதன்மூலமே இதன் நோக்கத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் இரா.தாஸ் கூறியதாவது:அரசு உதவி பள்ளிகளில் 5,000-க்கும் அதிகமாக உபரி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களைத்தான் மழலையர் வகுப்புகளுக்கு இடமாற்றம் செய்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அரசுப்பள்ளியில் உபரியாக இருக்கும் அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றிவிட்டனர். எஞ்சிய இடங்களுக்கு மட்டும் அரசு உதவிப் பள்ளிகளில் இருந்த ஆசிரியர்களை பணிமாறுதல் அளித்தனர். பணிமாறுதலும் பணிமூப்பு அடிப்படையில் வழங்கப்படவில்லை.

இந்த களேபரங்களுக்கு இடையே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு முரணாக அரசின் செயல்பாடுகள் உள்ளன. உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து மீண்டும் புதிய பணியிடங்களை உருவாக்கி அதன்மூலம் லாபம் சம்பாதிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர்.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. மேலும், 56 ஆரம்பப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், ஆசிரியர்கள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. அதேநேரம் அந்தப் பள்ளிகளில் இருந்து உபரி என ஓர் ஆசிரியரை பணிமாறுதல் செய்கின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் அரசு உதவிப் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை விடுத்து தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x