

சென்னையில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. 'பஸ் டே' பெயரில் கூரை மீது ஆட்டம்போட்ட மாணவர்களால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டதால் 24 மாணவர்களை போலீஸார் பிடித்தனர்.
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக்கல்லூரி, தியாகராயா கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் சிலர் ஆண்டுக்கணக்காக ரூட்டுகளில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ரூட்டுத்தல என்று மோதிக்கொள்வார்கள்.
'பஸ் டே' என்கிற பெயரில் கொண்டாட்டங்களைக் கொண்டாடி பேருந்து மீது ஏறி ஆட்டம் போடுவார்கள். இதனால் மாணவர்களுக்குள் மோதல் வந்து தாக்கிக்கொண்ட சம்பபவங்கள், கல்லெறி சம்பவங்களால் பயணிகள் காயமடைந்தது, ஆயுதங்களால் வெட்டிக்கொண்டது என தொடர்கதையானது.
இது தவிர பேருந்து மீதேறி ஊர்வலம் போவதும் அதன் காரணமாக பேருந்து மெதுவாகச் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் சென்னையில் பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்நிலையில் சென்னை போலீஸார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தனர்.
கல்லூரி தரப்பு, மாணவர் தரப்பு, காவல் அதிகாரிகள் என முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடந்தது. 'பஸ் டே' கொண்டாடினாலோ, ஆயுதத்துடன் வந்தாலோ கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் ஆண்டுதோறும் மாணவர்கள் அதை மீறுவதும் போலீஸார் நடவடிக்கை எடுப்பதும் தொடர்கிறது.
இன்று சென்னையில் உள்ள கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டன. கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே 'பஸ் டே' கொண்டாடினர். பேருந்தின் மீதேறி ஆட்டம் போட்டனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று மாணவர்களைப் பிடித்தனர்.
இன்று காலை ஷெனாய் நகரில் உள்ள புல்லா அவின்யூ அருகே உள்ள பார்க்கிலிருந்து சென்னை மாநகராட்சி பேருந்தை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி 'பஸ் டே' கொண்டாடினர்.
50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் பகுதியில் நின்றுகொண்டு கூச்சலிட்டு கொண்டும் மீதி உள்ள நபர்கள் பேருந்தில் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு தொங்கியபடியும் வந்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
இதையடுத்து அமைந்தக்கரை காவல் ஆய்வாளர் பெருந்துறை முருகன் அங்கு விரைந்து வந்து மாணவர்களை கலைந்து போகச்செய்தார். இதில் 13 மாணவர்கள் சிக்கினர்.
நியூ ஆவடி சாலையில் 'பஸ் டே' கொண்டாடி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த மாணவர்களில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அயனாவரத்தைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி பழைய மாணவரான சரத்குமார்(23) , அம்பத்தூரைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரான சுரேஷ்குமார்(20), மூன்றாம் ஆண்டு மாணவரான குணசேகரன் (20), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரான துரைராஜ்(21) ஆகியோரை போலீஸார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த பேனரை கைப்பற்றினர்.
இதேபோன்று ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பேருந்து மீதேறி 'பஸ் டே' கொண்டாடிய புதுக்கல்லூரி மாணவர்கள் போலீஸார் வருவதைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். வண்ணாரப்பேட்டையில் 'பஸ் டே' கொண்டாடிய 7 பேரை போலீஸார் பிடித்தனர்.
மொத்தம் 24 மாணவர்கள் சிக்கிய நிலையில் 20 மாணவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு இடையூறாக 'பஸ் டே' கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.