Published : 26 Jun 2019 11:04 AM
Last Updated : 26 Jun 2019 11:04 AM

மீட்டெடுக்கப்படுமா பழங்குடியினரின் இசை கருவிகள் ?

உலக இசை வரலாற்றில் தொன்மையானதும், மிகச் சிறந்த பாரம்பரியத்தையும் கொண்டது தமிழர் இசை. அதிக இசைக் கருவிகளையும், இசை வடிவங்களையும் கொண்ட இந்த இசை, பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வின் ஓர் அங்கமாக நிறைந்தது. பண்டைய காலத்தில் கோயில் முதல் அரசவை வரை சிறப்பிடம் பெற்றது தமிழர் இசை. தோல் கருவி, துளைக்கருவி, நரம்பு கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகையாக இசைக் கருவிகளை பிரித்தனர்  நம் முன்னோர்கள்.

தமிழக இசை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

350-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் இருந்துள்ளன. ஆனால்,  தற்போது

30-க்கும் குறைவான இசைக்கருவிகளே பயன்பாட்டில் உள்ளன.   சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்த பெரும்பாலான இசைக் கருவிகளும், அதன் இசை வடிவங்களும் அழிந்து விட்டன. குறிப்பாக, பழங்குடியின மக்களின் பழமையான பாரம்பரிய இசைக் கருவிகள் அழிவின் விளிம்பில் உள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் வட்டத்துக்கு உட்பட்ட தொன்மையான பழங்குடியின மலைக் கிராமங்களில், பாரம்பரிய இசைக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இயற்கையுடன் இணைந்து வாழும் இப்பழங்குடியின மக்களுக்கு துக்கமோ, மகிழ்ச்சியோ இசையே பிரதானம்.

கிராமத்தில் குழந்தை பிறந்தாலும், முதியவர் மறைந்தாலும் ஊர் கூடி தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை இசைப்பது வழக்கம். தமிழக-கேரள எல்லையில் அடர்ந்த வனத்தின் நடுவே உள்ள தூமனூர், கண்டிவாழி, பனப்பள்ளி, ஜம்புகண்டி, கல்காடு, காளப்பதி, சேக்கண்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில்,  பழமையான அவர்களது இசையையும், ராகங்களையும் கேட்பது அரிதாகி வருகிறது. பாரம்பரிய இசைக்கருவிகள் மெல்லமெல்ல அழிந்து போனதும், அடுத்த தலைமுறைக்கு இவற்றைக் கொண்டுசேர்க்க இயலாததும் பழங்குடியின இசையின் மறைவுக்குக்  காரணமாகிறது.

மதுப்பழக்கம் காரணமா?

டிவி, செல்போன் உள்ளிட்ட நகர்ப்புற நவீன சாதனங்கள் மலைக் கிராமங்களை சென்றடைந்ததுள்ளதும், ஆதிவாசி இளைஞர்களிடையே பரவி வரும் மதுப்  பழக்கமும், ஆதிவாசிக் கிராமங்களின் இசையை நலிவடைய வைத்துள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். டாஸ்மாக் மதுவால்தங்களது பாரம்பரியம் அழிந்து வருவதாக தெரிவித்து, கேரளாவில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளுக்கு தடை உள்ளதுபோல, தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளையும்  மூட வலியுறுத்தி, பழங்குடியின பெண்கள் தங்களது இசைக்கருவிகளை முன்வைத்துப்  போராட்டத்தில் ஈடுபட்டும் பலனில்லை.

“கி.பி. 1085-ம் ஆண்டு முதல்  1,100 வரை கொங்கு மண்டலத்தை ஆண்ட,அபிமான சோழ ராஜாதிராஜனால் இசைக் கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டதும், தவறாமல் இவர்களுக்கு கொடைவழங்கப்பட்டு வந்ததும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. ஆனால், காலப்போக்கில் பாரம்பரிய கிராமப்புறஇசைக் கலைஞர்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும், பழமையான இசையின் அழிவுக்கு முக்கியக்  காரணமாகிறது.

ஆவணப்படுத்தல் அவசியம்!

தமிழக இசைக் கல்லூரிகளில் பண்டைய இசை மற்றும் இசைக்கருவிகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்படுவதுமில்லை. இவை வளர ஊக்கப்படுத்தப்படுவதுமில்லை. சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட `சாக்ஸபோன்’ எனும் இசைக்கருவியை ஆங்கிலேயர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். ஆனால் 1,700 ஆண்டுகள் பழமையான இசைக்கருவிகளும்,  குறிப்புகளும் இதுவரை ஆவணப்படுத்தப்படாமல் உள்ளன. எனவே, அழிவின் விளிம்பில் உள்ள பழமையான, பழங்குடியின இசையை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்” என்கின்றனர் இசை ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x