Published : 10 Jun 2019 05:53 PM
Last Updated : 10 Jun 2019 05:53 PM

எம்எல்ஏ.க்களின் தன்னிச்சை கருத்துகளால் அதிமுக தலைமைக்கு தர்மசங்கடம்: கே.பி.முனுசாமி கண்டனம்

ஒற்றைத் தலைமை குறித்து எம்எல்ஏ.க்களின் தன்னிச்சை கருத்துக்களால் கட்சி தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்படுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மதுரை வடக்கு எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்நிலையில், அவரது கருத்தை வரவேற்று குன்னம் ராமசந்திரன் எம்.எல்.ஏ. ஊடகங்களில் பேட்டியளித்துள்ளார்.

இவ்வாறு எம்.எல்.ஏ.,க்கள் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் அதிமுக தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்படுவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம் பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிரிவு கண்ட அதிமுகவை ஒன்றாக இணைத்து பொதுக்குழுவை கூட்டி இரட்டை தலைமை என்று முடிவு செய்யப்பட்டு இன்று ஆட்சியும், கட்சியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஆனால்,  மதுரை வடக்கு எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று  கருத்து தெரிவித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து குன்னம் எம்.எல்.ஏ., இந்த கருத்தை ஆதரிக்கிறார்.

இத்தகைய போக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் இருவரும் வெளியில் கருத்துகளை கூறியது கண்டிக்கத்தக்கது.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோற்று,  கட்சி பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

இச்சூழ்நிலையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்.

எனவே, எம்.எல்.ஏ.,க்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது எதிரிகளுக்கு, துரோகிகளுக்கு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களுக்கு வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமைந்துவிடும்.

எனவே இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x