

இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் (2014-15) 5.6 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காவிட்டாலும் இத்தகைய வளர்ச்சி சாத்தியமாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் 100 நாள் செயல்பாடுகள் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மேலும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மை உருவாகி முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. கொள்கைகளை செயல்படுத்தி அதை அமல்படுத்துவதற்கு முன்பாகவே முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கக்கூடும் என்று கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பொருளாதார அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தாலும் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை ஆர்பிஐ நிச்சயம் மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளனர். சில்லறை பணவீக்க விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது. இருப்பினும் நடப்பு நிதி ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.6 சதவீத அளவுக்கு இருக்கும் என்று ஃபிக்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பொய்த்துப் போனாலும் நடப்பு நிதி ஆண்டில் வேளாண்துறையின் வளர்ச்சி ஸ்திரமாக இருக்கும் என்றும் சாகுபடி அளவு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதி, தடையில்லா மின்சாரம், தொழிலாளர் விவகாரத்துக்கு உடனடி தீர்வு, நில ஆர்ஜித கால அவகாசத்தைக் குறைப்பது, நிர்வாக ரீதியிலான தடைகளைக் களைவது, விரைவான அனுமதி, புதிய உத்திகளை வகுக்கும் மையங்களை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.