Published : 26 Jun 2019 12:50 PM
Last Updated : 26 Jun 2019 12:50 PM

திமுக- காங். கூட்டணிக்கு வேட்டுவைக்க நினைக்கவில்லை: உதயநிதி ஸ்டாலின்

திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசவில்லை என்று நடிகரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ''அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் நிற்க வேண்டும் என்றுதான் சொன்னேன். திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைக்கவேண்டும் என்றெல்லாம் நான் பேசவில்லை.

இந்தக் கூட்டணி ஜெயிக்க முக்கியக் காரணம் திமுக. அதன் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் முக்கியமான காரணம். திமுக- காங்கிரஸ் கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி. செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல. மக்கள் பிரச்சினைகளுக்காக இரண்டு ஆண்டுகளாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட கூட்டணி. அதனால்தான் இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

எதிரணியினரின் கூட்டணியை மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியுமா? அது செயற்கையான கூட்டணி. வெறும் பெட்டிக்காகவும் சீட்டுக்காகவும் மட்டுமே அமைந்த கூட்டணி'' என்றார் உதயநிதி ஸ்டாலின்.

அண்மையில் திருச்சியில் பொதுமக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற குடிநீர் பிரச்சினைக்கான போராட்டத்தின்போது பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “காங்கிரஸை எத்தனை நாட்கள்தான் நாங்கள் தோளில் தூக்கி சுமப்பது? வேலை பார்த்த நாங்கள் என்ன வாயில் குச்சியை வைத்துக்கொண்டு போவதா? உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தலைமையை வலியுறுத்துவோம்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அதேபோல உதயநிதி, ''வரும் தேர்தல்களில் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்'' என்று கூறியது பரபரப்பைக் கிளப்பியது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டுவைக்க வேண்டும் என்றெல்லாம் பேசவில்லை  என்று தனது பேச்சு குறித்து உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x