Published : 06 Jun 2019 12:55 PM
Last Updated : 06 Jun 2019 12:55 PM

சாலை விபத்தை ஏற்படுத்தி திட்டமிட்டு ரூ.25 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது: மேலும் 2 பேரை பிடிக்க தேடும் பணி தீவிரம்

கோவையில் திட்டமிட்டு ரூ.25 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை ராஜவீதியில் சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான நகைப்பட்டறை உள்ளது. இங்கு சலீவன் வீதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (58) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். ராமமூர்த்தி நேற்று முன்தினம் காலை 106 பவுன் (845 கிராம்) நகையை, தாராபுரம் சென்று வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நகையின் மதிப்பு ரூ.25.35 லட்சம் ஆகும்.

காந்திபுரம் ராமர் கோயில் அருகே வந்த போது, இளைஞர் ஒருவர் ராமமூர்த்தியின் வாகனத்தின் மீது மோதினார். இதில் அவர் கீழே விழுந்தார். அவருக்கு உதவி செய்வது போல் நடித்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ராமமூர்த்தியிடம் இருந்த 106 பவுன் நகை பையை கொள்ளையடித்துச் சென்றனர்.

திட்டமிட்டு நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் ஆய்வாளர் (பொறுப்பு) ரவிக்குமார் தலைமையிலான காட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விபத்து ஏற்படுத்திய இளைஞரான ராஜாவை பிடித்து போலீஸார் விசாரித்தனர். போலீஸார் விசாரணை இறுதியில் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் கூறும் போது,‘‘ நகைப்பட்டறை ஊழியரிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,’’ என்றார்.

மாநகர போலீஸார் கூறியதாவது: இந்த நகை கொள்ளை வழக்கு தொடர்பாக துடியலூர் அருகேயுள்ள தொப்பம்பட்டியை சேர்ந்த டேனியல் (30), அவரது மனைவி சங்கீதா (23), ராஜா (26), பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த பத்ரிநாதன் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்ரிநாதன், சுரேஷ்குமாரின் நகைப்பட்டறையில் சில மாதங்கள் ஊழியராக பணியாற்றி, கடந்த 4 மாதங்களுக்கு முன் அங்கிருந்து நின்று விட்டார்.

அவருக்கு ராமமூர்த்தி நகைகளை கொண்டு செல்வது தெரியும். அதன்படி, இந்த விவரம் குறித்து டேனியல், சங்கீதா, ராஜா, பத்ரிநாதன், பிருத்திவிராஜ் உள்ளிட்ட 6 பேர் பேசும் போது, அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

சாதாரணமாக கொள்ளை யடித்தால் போலீஸாரிடம் பிடிபட்டு விடுவோம் என, சாலை விபத்தை ஏற்படுத்தி நூதன முறையில் நகையை கொள்ளையடிக்க தி்ட்டமிட்டனர். அதற்கேற்ப சாலை விபத்தை ஏற்படுத்தி, நகையை கொள்ளையடித்துள்ளனர். சம்பவத்தன்று ராஜா விபத்தை ஏற்படுத்துகிறார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பிருத்திவிராஜ், குமார் ஆகியோர் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னால் இதை கண்காணித்தபடி காரில் டேனியல், சங்கீதா, பத்ரிநாதன் ஆகியோர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேனியை சேர்ந்தவர்கள். டேனியலின் தம்பி பிருத்திவிராஜ், உறவினர் குமார் ஆகியோரை தேடி வருகிறோம். இவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், கார், 60 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x