Published : 09 Jun 2019 12:00 AM
Last Updated : 09 Jun 2019 12:00 AM

மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு வெள்ளக்கல் நகரை சாட்டிலைட் சிட்டியாக மாற்ற திட்டம்: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுப் பொலிவு பெற நடவடிக்கை

மதுரை வெள்ளக்கல்லில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.151 கோடியில் சாட்டிலைட் சிட்டியாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தேசிய அளவிலான சுகாதாரத்தில் மதுரை 201-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதியில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நூறு வார்டுகளில் இருந்து தினமும் 650 மெட்ரிக் டன் முதல் 750 மெட்ரிக் டன் குப்பை வெளியேற்றப்படுகிறது.

இதை மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் மாநகராட்சி நிர்வாகம் கொட்டுகிறது. இங்கு ஒரு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய குழிகளைத் தோண்டி அதில் குப்பையைக் கொட்டி மண்ணைக் கொண்டு புதைத்தனர். அதில் பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ், உலோகக் கழிவுகள் இருந்தன. ஆனால் தற்போது மக்கும், மக்காத குப்பை எனத் தனித்தனியே பிரித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் வெள்ளக்கல் அருகே மற்றொரு இடத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இங்கும் சுமார் 100 ஏக்கரில் 5 கி.மீ. சுற்றளவில் பெரிய மலை போல் குப்பை தேங்கி உள்ளது. தற்போது வரை 16 கோடியே 17 லட்சத்து 701 கன மீட்டர் அளவுக்கு குப்பை தேங்கியுள்ளது.

இதை அகற்றுவது மாநகராட்சிக்குப் பெரும் சவாலாக உள்ளது. இந்த குப்பையால் வெள்ளக்கல் பகுதியில் வீடுகள், தொழிற்சாலைகள், பள்ளிகள் தொடங்கப்படாததால் அப்பகுதியில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளதால் வெள்ளக்கல் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களும் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பராமரிப்பு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். முதலில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க இரண்டு இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அடுத்து குப்பை குவியும் இடத்திலேயே அதை அழிக்கவும், வெள்ளக்கல் பகுதியில் குவிந்துள்ள குப்பையை மக்கச் செய்து அந்த இடத்தில் ரூ.151 கோடியில் ‘சாட்டிலைட் சிட்டி’ அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறியதாவது: மக்கக் கூடியவற்றில் நாப்கின், டியூப் லைட் உள்ளிட்ட கழிவுகள் உள்ளன. மக்காத குப்பையில் மறு சூழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக், கண்ணாடி, பைபர், இரும்பு, இதர கனிம வகைகள் உள்ளன. குப்பையைத் தரம் பிரித்துத் தரவும், அவற்றை உரமாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

குப்பை குவியும் இடத்திலேயே அதை அழிக்க ரூ.50 கோடியில் 82 பொது இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த இடங்களில் மாநகரில் சேகரிக்கப்படும் 246 மெட்ரிக் டன் குப்பையை மறுசுழற்சி செய்து உரமாக மாற்றப்படும். மீதம் உள்ள குப்பை 25 அடுக்கு மாடி குடியிருப்புகள், 152 திருமண மண்டபங்கள், 20 நூலகங்கள், 35 விடுதிகள், 317 ஹோட்டல்கள், 45 கல்லூரிகள், 361 பள்ளிகள், 76 தொழிற்கூடங்கள் ஆகிய இடங்களில் உருவாவதாகக் கணக்கெடுத்துள்ளோம்.

இந்த குப்பையை அவர்களே மக்கும் உரமாக மாற்றும் பொறுப்பை ஒப்படைக்க உள்ளோம். குப்பையை உருவாக்கும் இடத்திலேயே அழிக்கும் திட்டத்தால் இன்னும் ஓர் ஆண்டில் வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் குப்பையைக் கொட்டத் தேவையில்லை. அங்குள்ள குப்பையை ரூ.101 கோடியில் அழித்து ‘சாட்டிலைட் சிட்டி’ உருவாக்கப்படும். இங்கு தகவல் தொடர்பு, சாலை, புதிய தொழில்கள், கல்வி, மருத்துவம் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்று வட்டார கிராம மக்களும் பொருளாதார வளர்ச்சி பெறுவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x