

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் குளச்சல் மு.யூசுப், தனக்கு வழங்கப்பட்ட விருதில் இந்திக்குப் பதிலாக, தமிழில் எழுத்துகளைப் பொறித்துத் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை பூர்வீகமாகக் கொண்டவர் குளச்சல் மு.யூசுப். தற்போது நாகர்கோவிலில் வசித்துவரும் இவர், மலையாளத்தில் இருந்து பல்வேறு படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். பள்ளிக்கூட படிப்பையே தாண்டாத குளச்சல் யூசுப் தொடக்கத்தில் பலசரக்குக் கடை நடத்தினார். அங்கு பொட்டலம் மடிக்க வரும் காகிதங்களின் வாயிலாக மலையாளம் படித்தவர், ஒருகட்டத்தில் இலக்கியங்கள் படைக்கத் தொடங்கினார்.
மலையாளத்தில் இந்துகோபன் எழுதிய நாவலை 'திருடன் மணியன்பிள்ளை' என்னும் தலைப்பில் தமிழுக்கு மொழிபெயர்த்தார் யூசுப். இந்த நாவல் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு பிரிவுக்கான (தமிழ்) சாகித்ய அகாடமி விருதை குளச்சல் மு.யூசூப்புக்கு பெற்றுக் கொடுத்தது.
மனம் திருந்தி வாழும் முன்னாள் திருடரின் சுயசரிதையே இந்நாவல். இந்நிலையில் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு, திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் விருது வழங்கும் விழா கடந்த 14-ம் தேதி நடந்தது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து விருது அறிவிக்கப்பட்டிருந்த படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி தலைவர் விருதுகளை வழங்கினார். இவ்விழாவில் குளச்சல் மு.யூசுப்புக்கும் விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட யூசுப், தனக்கு வழங்கப்பட்ட விருதில் உள்ள இந்தி எழுத்துகளை மாற்றி தமிழில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சாகித்ய அகாடமி இதனை பரிசீலிப்பதாகக் கூறியதாக யூசுப் தெரிவித்தார்.