Last Updated : 27 Sep, 2014 07:06 PM

 

Published : 27 Sep 2014 07:06 PM
Last Updated : 27 Sep 2014 07:06 PM

ஊழல் தடுப்புச் சட்டம்: இந்திய அரசியல் வரலாற்றில் முதல்வர் ஜெயலலிதா

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர் என்ற பெயரை எடுத்து சிறப்பு கவனம் பெற்றுள்ளார் ஜெயலலிதா.

இதே சட்டத்தின் விளைவாக, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாத்வ் பதவி பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் தீர்ப்பு வழங்கப்பட்டபோது முதல்வர் பதவியில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.


இந்த அதிரடி தீர்ப்பு அதிமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் மற்றும் விசுவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் தீர்ப்பு வெளியானவுடன் அதிமுகவினர் கதறி அழுதனர்.

18 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிச்சயம் தங்களது ‘அம்மா’ குற்றவாளியாக இருக்க மாட்டார் என்றே அதிமுக தரப்பினர் பயங்கர நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

இது ஒரு பொய் வழக்கு என்றே அதிமுகவினர் நம்பினர். இப்போது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதை அதிமுக-வினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல நகரங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காஞ்சிபுரத்தில் பேருந்து ஒன்றை எரித்தே விட்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி, பிறகு லோக்சபா தேர்தல்களில் அபார வெற்றி போன்றவை அதிமுக ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ் என்றே கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு அதிமுக-வினரின் இருதயத்தை உடைத்து சுக்கு நூறாக்கியதில் வியப்பேதும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x