Published : 22 Sep 2014 10:01 AM
Last Updated : 22 Sep 2014 10:01 AM

பயணிகளின் பாதுகாப்புக்காக ஆம்னி பஸ்களில் கண்காணிப்பு கேமரா: உரிமையாளர்கள் முடிவு

பஸ் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆம்னி பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து தினமும் 900க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்கின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்கிறார்கள்.

நீண்டதூரம் செல்லும் பஸ்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. சென்னை வரும் பஸ்களிலும் பயணிகளின் உடைமைகள், கைப்பையில் இருக்கும் பணம் போன்றவை திருடப்படுகின் றன.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய பிறகுதான் தங்கள் பொருட்கள், நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பதை அறிந்து பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள். குற்றவாளிகள் எங்கு ஏறுகிறார்கள் எங்கு இறங்குகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. இதற்கிடையே, ஆம்னி பஸ்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோயம்பேடு உதவி கமிஷனர் மோகன்ராஜிடம் மனு கொடுத்தனர்.

இது தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘‘ஆம்னி பஸ்களின் பயணிகள் மற்றும் உரிமையாளர்களின் பாதுகாப்பு கருதி ஆம்னி பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென போலீஸ் தரப்பில் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையும் நெருங்கவுள்ள நிலையில், பயணிகள் கூட்டமும் அதிகரிக்கும்.

எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருதி ஆம்னி பஸ்களில் கேமராக்கள் படிப்படியாக பொருத்தப் படவுள்ளன. இதனால், பொருட்களை திருடி செல்லும் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x