Published : 10 Jun 2019 01:00 PM
Last Updated : 10 Jun 2019 01:00 PM

ஒற்றைத் தலைமையா என்பதைக் காலம் முடிவு செய்யும்; அதிமுகவினர் கப்சிப்பென்று இருக்க வேண்டும்: ஜெயக்குமார் பேட்டி

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையா என்பதைக் காலம் முடிவு செய்யும். அதிமுகவினர் தலைமை குறித்துப் பேசாமல் கப்சிப்பென்று இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எம்எல்ஏக்கள் சிலர் கூறிய நிலையில், இதுதொடர்பாக சென்னை, ராயபுரத்தில் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''அதிமுகவில் பிளவு இல்லை. கட்சியினர் அனைவரும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆகியோரின் வேண்டுகோளின்படி கப்சிப்பென்று இருக்க வேண்டும். ஒன்றரை கோடி பேர் கொண்ட அதிமுகவில் அண்ணன் - தம்பி பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அறைக்குள் விவாதிக்க வேண்டியதை அறைக்குள்தான் செய்ய வேண்டும். அம்பலத்தில் விவாதிக்கக் கூடாது. ஒற்றைத் தலைமை வேண்டுமா என்பதைக் காலம் முடிவு செய்யும்.

மாவட்டச் செயலாளர் என்ற முறையில் நிர்வாகிகளுடன் ராஜன் செல்லப்பா கலந்து ஆலோசித்ததில் தவறு எதுவுமில்லை. 2021-லும் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவோம். இன்னும் மீதமுள்ள இரண்டு ஆண்டு கால ஆட்சியையும் வெற்றிகரமாக நிறைவு செய்வோம். ஸ்டாலினும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் நினைப்பது நடக்காது.

அண்ணா கூறியபடி துண்டு என்பது பதவி. வேட்டி என்பது மானம் போன்றது. எங்களுக்கு மானம்தான் முக்கியம். எந்த நிலையிலும் பதவிக்காகப் பல்லிளிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகளின் சதி வலையில் அதிமுக தொண்டர்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது. பொதுக்குழு வரும் 12-ம் தேதி நல்லபடியாக நடக்கும்''.

இவ்வாறு அமைச்சர்ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x