Published : 05 Jun 2019 02:26 PM
Last Updated : 05 Jun 2019 02:26 PM

முதல்வர் பழனிசாமி மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக ஏற்கிறாரா?- ஆர்.எஸ்.பாரதி கேள்வி

பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டும் என்பது, மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகும், என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துகிறேன். அப்படி செய்வது, உலகின் மிக தொன்மையான மொழிகளில் ஒன்றுக்கு செய்யும் சேவையாகும்", என பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டும் என்றால், அதனை மூன்றாவது மொழியாகவே சேர்க்க முடியும். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்தது.

இந்நிலையில், இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரலாற்றை மறைக்கும் வகையில், அடிமை சாசனத்தில் கையெழுத்து போடுவதை போல, இப்போது தமிழை பிற மாநிலங்களிலே பயிற்று மொழியாகக் கொண்டு வரவேண்டும் என, பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுப்பது, மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள்.

முதல்வர் தெளிவாகச் சொல்ல வேண்டும். அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கையா? அல்லது மும்மொழிக் கொள்கையா என முதல்வர் தெளிவாகச் சொல்ல வேண்டும்", என, ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x