

கூடங்குளம் அணு உலையால் அழிவின் பிடியில் தமிழக மக்கள் உள்ளதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வேல்முருகன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மக்களுக்காகத்தான் அரசும் சட்டமும். ஆனால் மக்கள் விருப்பத்துக்கு மாறாக, சட்டத்துக்கும் புறம்பாக அமைக்கப்பட்டன கூடங்குளம் அணு உலைகள்.
மின் உற்பத்திக்கென சொல்லப்பட்ட அந்த அணு உலைகள், ஏன் மென்நீர் உலைகள்? அடிக்கடி அவை நின்றுபோவது ஏன்? பழுதாவது ஏன்? அவற்றின் தரம் பற்றிய நற்சான்றிதழ் எங்கே? எந்தக் கேள்விக்கும் பதிலில்லை இதுவரை.
இந்நிலையில், கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அங்கே வளாகத்திற்குள்ளேயே வைக்க முடிவு செய்துள்ளார்கள். அதற்காக, 'பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த உள்ளார்கள். இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் ஜூலை 10 ஆம் தேதியன்று நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.
இந்த அறிவிப்பானது, ஏற்கெனவே அணு ஆபத்து அச்சத்தில் இருக்கும் மக்களிடையே உயிர் பய பீதியையே ஏற்படுத்தியுள்ளது. காரணம், அணுவும் சரி, அணுக்கழிவும் சரி, நிரந்தர அழிவு சக்தியே!
கூடங்குளம் அணு உலை தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் 15 நிபந்தனைகளைக் கூறி அணு உலை செயல்பட அனுமதிக்கப்பட்டது. அந்த நிபந்தனைகளில் முக்கியமானது, "அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை (ஏஎஃப்ஆர்) 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும். அதாவது அணு உலை இருக்குமிடத்தை விட்டு, தொலைவில், தக்கதோர் இடத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்க வேண்டும் என்பதே.
ஆனால் அந்த 5 ஆண்டுகளில் ஏஎஃப்ஆர் உருவாக்கப்படவில்லை. அதன் கால அவகாசம் 2018 மார்ச் மாதத்தோடு முடிந்தது. இந்நிலையில், மேலும் 5 ஆண்டுகள் கோரி, 2018 பிப்ரவரியில் மனுத்தாக்கல் செய்தது இந்திய அணுசக்தி கழகம். ஏஎஃப்ஆர்-ஐ வடிமைமைப்பதில் சிக்கல் உள்ளதாக காரணம் காட்டியது.
உடனே, "அணுக்கழிவுகளை உலைகளுக்குள்ளேயே சேமித்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது; அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தும் 'ஆழ்நிலைக் கருவூலம்' (டிஜிஆர்) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில், ஏஎஃப்ஆர் போன்ற தற்காலிக வசதியை நம்பி கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது ஆபத்தானதாகும். அதனால் இந்திய அணுசக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். ஏஎஃப்ஆர் மற்றும் டிஜிஆர் வசதிகளை ஏற்படுத்தும் வரை இரு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும்" என பூவுலகின் நண்பர்கள் சார்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை அமர்வு, "அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகக் கையாள என்ன செய்யப்போகிறீர்கள் என்பது குறித்த ஆய்வறிக்கையை, 2018 ஜூலை முதல் வாரத்திற்குள் அணு உலை ஒழுங்குமுறை ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டது.
அதன்படி தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், "கூடங்குளம் அணு உலையில் உள்ள எரிபொருள் கிடங்கு அதன் முழுக் கொள்ளளவை இன்னும் எட்டவில்லை; எனவே மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும்;அதற்குள் ஏஎஃப்ஆர்-ஐ கட்டி முடித்துவிடுவோம்" எனக் கூறியிருந்தது அணு உலை ஒழுங்குமுறை ஆணையம்.
இதனை ஏற்று, 2022 ஆம் ஆண்டுக்குள் ஏஎஃப்ஆர்-ஐ கட்டி முடித்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.
ஆனால் இந்தத் தீர்ப்புக்கு மாறாக, கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே ஏஎஃப்ஆர்-ஐக் கட்டுவதற்கு முடிவு செய்து, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான சட்டமீறல் அல்லவா?
டிஜிஆர் முறை கூட பாதுகாப்பானதில்லை என்றுதான் அதைப் பயன்படுத்தும் நாடுகளே கூறுகின்றன; அதோடு,அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலாகவே உள்ளது என்றும் அந்த நாடுகள் சொல்கின்றன. இந்த நிலையில், ஏஎஃப்ஆர்-ஐ கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே கட்டுவோம் என்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்தையே அழிப்போம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன?
மோடி அரசு இந்தியா முழுவதும் அமைக்கவிருக்கும் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் மொத்தத்திற்கும் சேர்த்துத்தான் கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே ஏஎஃப்ஆர்-ஐ கட்டும் முடிவு! இதனை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
நிரந்தர அணுக்கழிவு மையத்திற்கான தெளிவான திட்டத்தை உருவாக்கும் வரையில் கூடங்குளம் அணு உலைகள் இரண்டையும் நிறுத்த வேண்டும்; மேற்கொண்டு அங்கு அணு உலைகள் அமைப்பதையும் கைவிட வேண்டும். இதனை தமிழகக் கட்சிகள்,அமைப்புகள், மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும்" என, வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.