Published : 23 Jun 2019 10:58 AM
Last Updated : 23 Jun 2019 10:58 AM

முன்னாள் காவல்துறை டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் காலமானார்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், சிபிஐயில் அதிக காலம் பணியாற்றியவருமான வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 91.

வி.ஆர்.லட்சுமி நாராயணன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி புகழ்பெற்ற வி.ஆர். கிருஷ்ணய்யரின் சொந்த சகோதரர். வழக்கறிஞருக்குப் படித்து பின்னர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற லட்சுமி நாராயணன் 1951-ம் ஆண்டு காவல் பணியில் இணைந்தார்.

மதுரை எஸ்.பி.யாக முதன்முதலில் அவர் பொறுப்பேற்றபோது தமிழக முதல்வராக காமராஜர் இருந்தார். பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர் தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். தனது பணிக்காலத்தில் பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா கருணாநிதி, எம்ஜிஆர் என பல தலைவர்கள், முதல்வர்களுடன் பணியாற்றினார்.

தன்னுடைய பணிக்காலத்தில் நேர்மையாகச் செயல்பட்டு பலராலும் பாராட்டப்பட்டவர். 1970 முதல் 1980 வரை டெல்லி சிபிஐயில் பணியாற்றியவர், இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் சரண் சிங் உள்ளிட்ட பல தலைவர்களுடன் பழகினார்.  நெருக்கடி காலகட்டத்திற்குப் பின் 1977-ல் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தபோது மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். அப்போது சிபிஐ அதிகாரி என்ற முறையில் வி.ஆர். லட்சுமி நாராயணன்தான் இந்திரா காந்தியைக் கைது செய்தார்.

இந்திரா காந்தியை கைது செய்த விவகாரம் பெரிதாக வெடித்தது. 1980-ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது லட்சுமி நாராயணன் சிபிஐயிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழக காவல் துறைக்கு மீண்டும் வந்தார். 1980- 81 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றிய பின்னர் 1984, 85 ஆம் ஆண்டுகளில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தன்னுடைய பணிக்காலத்தில் பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டியாக இருந்த லட்சுமி நாராயணன்,  காவல் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். காவல்துறை அனுபவத்தை வைத்து, 'நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்' என்ற நூலை எழுதியுள்ளார்.

ஓய்வுக்குப் பின் சென்னையில் வசித்து வந்த அவர் சில காலமாக உடல் நலம் பாதித்த நிலையில் இன்று காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x