பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
Updated on
1 min read

இயற்கை கைவிட்ட நிலையில் பொதுமக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், "இயற்கை கைவிட்ட நிலையில் பொதுமக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

சென்னையை அடுத்த நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படு. இதன்மூலம், 150 எம்.எல்.டி. குடிதண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இந்த நிலையத்துக்கு விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்மூலம் தென் சென்னையின் தண்ணீர் தேவை தீரும். இப்போது செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் ஏரிகளில் தண்ணீர் இல்லை. பூண்டி ஏரியைப் பொறுத்தவரை 55 எம்.எல்.டி தண்ணீர் தினமும் எடுத்து வருகிறோம்.  அது சில வாரங்களுக்கு பயன்படுத்த இயலும். இதுதவிர மேட்டூரில் இருந்து வீராணத்தில் ஒரு டி.எம்.சி. தண்ணீர் நிரப்பப்படுவதால் அது நவம்பர் வரை பயன்படும்.

இயற்கை கைவிட்ட நிலையில் பொதுமக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மக்கள் தண்ணீரை விரயமாக்கக் கூடாது என அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

சிறிய தெருக்களில் வசிக்கும் மக்களுக்குகூட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் லாரிகளில் இருந்து பைப் மூலம் தண்ணீரை விநியோகித்து வருகிறோம்.

வடசென்னை பகுதியில் லாரி தண்ணீருக்காக மக்கள் இரவு வெகு நேரம் காத்திருக்கிறார்கள் எனக் கூறுகிறீர்கள். ஒருநாளைக்கு 300-க்கும் மேற்பட்ட லாரிகள் 9000 ட்ரிப்கள் அடிக்கின்றன.

அதனால் தண்ணீர் நிரப்பும் இடத்திலேயே இயல்பாகவே கால தாமதமாகும். அந்த தாமதத்தைக்கூட சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். விளைநிலங்களில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தலின்படி கர்நாடகம் உடனடியாக 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், என்ன விலை கொடுத்தாவது மக்களின் தாகத்தைத் தீர்க்க கட்சியும் ஆட்சியும் தயாராக இருக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in