Last Updated : 17 Jun, 2019 12:00 AM

 

Published : 17 Jun 2019 12:00 AM
Last Updated : 17 Jun 2019 12:00 AM

சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுவோரை மக்களே காப்பாற்றலாம்: சட்டப் பாதுகாப்பு இருப்பதாக ஆர்டிஓ தகவல்

சட்டப் பாதுகாப்பு இருப்பதால் சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுவோரை பொதுமக்களே மருத்துவமனைகளில் சேர்த்து உயிரைக் காப்பாற்றலாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடங்களில் வேடிக்கை பார்க்க அதிகம் பேர் கூடுவது வழக்கம். விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதில் ஆர்வம் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். விபத்து தொடர்பாக போலீஸாருக்கு தகவல் சொல்லக்கூட தயங்குகின்றனர்.

போலீஸூக்கு தகவல் தெரிவித்தால் தன்னையும் வழக்கில் சேர்ப்பார்கள், தேவையில்லாமல் நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்க வேண்டும் என்ற அச்சத்தில் விபத்து குறித்து போலீஸாருக்குப் பலரும் தகவல் தெரிவிப்பதில்லை.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் முதல்கட்ட சிகிச்சைக்குப் பணம் கட்டச் சொல்வார்கள் என நினைத்து காயமடைந்தோரை மீட்கப் பலரும் தயங்குகின்றனர். இத்தயக்கம் விலைமதிப்பற்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாகிவிடுகிறது.

இந்நிலையில் உரிய சட்டப்பாதுகாப்பு இருப்பதால் சாலை விபத்துகளில் காயமடைவோரை தாமதிக்காமல் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் என கோவை (மையம்) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:விபத்துகளைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியமானது. விபத்தில் பலத்த காயமடைவோரை ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களின் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறு சேர்த்தால் 50 சதவீத உயிரிழப்புகள் குறைந்துவிடும். ஆனால் போலீஸ், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பயந்து, விபத்து நடந்த இடத்தில் உதவிக்கு வர பலர் தயங்குகின்றனர்.

சிறு காயம் அடைந்தோருக்கு பலர் உதவுகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள், நினைவு தப்பியவர்கள், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டோருக்கு உதவுவது குறைவாகவே உள்ளது.

இதனால், விபத்தில் காயமடைந்தோரின் உயிரைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு சாமரியன் சட்டத்தை (Good samaritan law) நிறைவேற்றியது. இதன்படி விபத்துக் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம். விருப்பம் இல்லாத நிலையில் தங்களது பெயர், முகவரியைக் தெரிவிக்க வேண்டியதில்லை. காயமடைவோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கலாம். முதல் கட்ட சிகிச்சைக்குப் பணம் செலுத்தவும் வேண்டியதில்லை. உங்களை விபத்து தொடர்பாக எந்தவித உரிமையியல், குற்றவியல் வழக்குகளிலும் சேர்க்கமாட்டார்கள்.

இவ்வாறு சட்டப்பாதுகாப்பு உள்ளதால் சாலை விபத்துகளில் காயமடைவோரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்து உதவி செய்ய மக்கள் முன்வர வேண்டும். அவர்களின் இந்தச் சேவையை அரசும், சமுதாயமும் பாராட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x