தனது தாத்தாவின் மறுவடிவமாக இருக்கிறார் உதயநிதி:திமுக மாநில இளைஞரணி நிர்வாகி பைந்தமிழ் பாரி பேட்டி

தனது தாத்தாவின் மறுவடிவமாக இருக்கிறார் உதயநிதி:திமுக மாநில இளைஞரணி நிர்வாகி பைந்தமிழ் பாரி பேட்டி
Updated on
3 min read

மக்களை அணுகுவதிலும், கேள்விகளை எதிர்க்கொண்டு பதிலளிப்பதிலும் தனது தாத்தா கருணாநிதி போன்று  உள்ளார்  உதயநிதி என திமுக இளைஞரணி மாநில துணைச்செயலாளர் பைந்தமிழ் பாரி தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் திமுகவின் நட்சத்திர பிரமுகராக கடந்த மக்களவை தேர்தலில் வலம் வந்தார். அவரது பிரச்சாரத்தில் கூடிய கூட்டம், மக்களின் வரவேற்பு மற்றக் கட்சித்தலைவர்களை அவர் பேச்சுக்கு பதில் சொல்லும் அளவுக்கு கொண்டுச் சென்றது.

பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையாக பிரச்சாரம் செய்து அதன்மூலம் திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கு வெற்றியையும் தேடித்தந்த உதயநிதி இளைஞரணி பொறுப்புக்கு  வரும் சரியான நேரம் இது என மாநிலம் முழுதும் கட்சியினர் தீர்மானம் போட்டு தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அருகில் இருந்து கட்சிப்பணி ஆற்றிய மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ் பாரியிடம் இந்து தமிழ் திசை சார்பில் கேட்டபோது அவர் அளித்த பதில்:

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகியாக வர வாய்ப்புள்ளதாக வரும் தகவலால் விமர்சனமும் அதிகம் வருகிறதே?

கண்டிப்பாக தலைமைக்கு வரக்கூடிய அனைத்து தகுதிகளும் உண்டு அவருக்கு. இது ஒரு மாநில கட்சி, கட்சியைப் பொருத்தவரை அனைவரும் குடும்பம் மாதிரித்தான், ஆகவே அவருக்கு சாதாரணமாக மரியாதையும், பணிவும், கம்பீரமும் அந்த குடும்ப ரீதியாகத்தான் வரும். விமர்சனம் செய்பவர் செய்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

தலைமையை நோக்கி அவரது பயணம் இருந்ததாக எடுத்துக்கொள்ளலாமா?

உதயநிதி வெற்றிகரமான பிஸ்னெஸ்மேனாக இருந்துள்ளார். வெற்றிகரமான ஹீரோவாக உள்ளார். மற்ற ஹீரோபோன்று நடித்து அரசியலில் வரவேண்டும் காலூன்றவேண்டும் என்கிற கனவு எல்லாம் இல்லை.

கட்சியின் பின்புலம் உள்ளது. 30 சதவித வாக்குகள் உள்ளது. கடந்த 10, 12 ஆண்டுகளாக அவர் செல்லுமிடமெல்லாம் வரவேற்பு உள்ளது. ஸ்டாலினுக்கு குறிஞ்சிமலர் வந்தப்பின் ஒரு வரவேற்பு வந்தது. அது போன்று இவருக்கும் அதைவிட கூடுதலாக வரவேற்பு உள்ளது.

இளைஞர்கள், கட்சியில் உள்ள குடும்ப பாரம்பரியமாக வந்த இளைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது. தேர்தல் ஆனாலும், தனிப்பட்ட கூட்டமானாலும் பெரும் ஆர்வமாக கூடுகிறார்கள். நம்ம குடும்பத்தில் ஒருத்தர் என்று பார்க்கிறார்கள். அவரைப்போன்ற மக்களை கவரும் ஒருவர் இன்று மற்றக்கட்சிகளில் யாரும் இல்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

1965-ல் கட்சிக்கு வந்த ஸ்டாலின் பல கட்டங்களை கடந்தாலும் அவருக்கான அங்கீகாரம் 1980 களுக்கு மேல்தான்  ஆனால் உதயநிதி குறுகிய காலகட்டத்தில் வருகிறாரே?

படிப்படியாக அவரது வளர்ச்சி இருந்தது,  2006-ல் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளித்திருந்தால் இன்று திமுக ஆட்சியில் இருந்திருக்கும். தலைவரே மிக தாமதமாகத்தான் பொறுப்புக்கு வந்தார் என்றுதான் இன்றும் எங்களில் பலருடைய எண்ணம். அதுபோல் உதயநிதிக்கு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் அவரை விரைவாக தலைமைக்கு கொண்டுவர கேட்கிறோம்.

அவர் ஒன்றும் வேறு நபர் அல்லவே, திமுக குடும்பம், திமுக ரத்தம். தாத்தாவுக்காக, தந்தைக்காக, மாமாவுக்காக பிரச்சாரம் செய்துள்ளார்.

திமுகவில் தலைமையில் இருப்பவர்களை எளிதில் அணுக முடியாது என்பார்கள், இவர் எப்படி?

எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும் நெரிசல், தள்ளுமுள்ளு இருந்தாலும் விஜயகாந்தோ இன்னும் சில தலைவரோ டக்குன்னு கோபப்படுவாங்க, ஆனால் உதயநிதி சிரித்த முகத்துடனேயே இருப்பார். எத்தனை பெரிய கூட்டத்திலும் எவ்வளவு பெரிய தள்ளுமுள்ளுவிலும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார்.

கோபத்தை வெளியில் காண்பித்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால் அத்தனைப் பேரும் தன்னைப்பார்க்க வந்துள்ளார்கள் என்ற எண்ணம் எப்போதும் அவருக்கு உண்டு. அவரிடம் வார்த்தைகளை வாங்க முடியாது. வாங்கினால் அவங்க தாத்தா போன்று பளீர்னுதான் பதில் வெளியே வரும். இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் பளீர் என்று ஒரே தடவையில் பதில் வரும்.

கட்சியில் தலைமைக்கு வர நேரடியாக அனுபவம் இருக்கணும் அல்லவா?

அவர் வார்டு அளவில் பணியாற்றியுள்ளார், தேர்தல் பணியை பூத்துகள் அளவில் பணியாற்றியுள்ளார். தாத்தா, தந்தை அருகில் உட்கார்ந்து அரசியலை பார்க்கும் அனுபவம் மற்றவர்களுக்கு கிடைக்காது அல்லவா? அவருக்கு அது கிடைத்தது. அதுவே போதும் 50 ஆண்டு அனுபவம் அல்லவா?

இன்றுள்ள சூழ்நிலையில் இளைஞர்களை தத்துவார்த்த ரீதியாக தயார் செய்யும் அவசியம் உள்ளது. இளைஞர் அணி அதற்கு என்ன செய்ய போகிறீர்கள்?

வெறுமனே போகிறோம் ஓட்டுக் கேட்கப்போகிறோம் என்று இல்லை. திமுக என்பது ஒரு தத்துவார்த்த இயக்கம்தான். நாங்கள் மக்களை பாதிக்கும் விஷயங்களை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம். மாணவர்கள் மத்தியில் தமிழ், தமிழார்வம் உள்ளிட்ட பல விஷயங்களை கொண்டுச் செல்கிறோம். மீத்தேன், கெயில், வேலை வாய்ப்பின்மை அனைத்தையும் கொண்டுச் செல்கிறோம்.

கட்சித்தலைமைக்கு உதயநிதி வந்தால் இளைஞரணியை மேலும் விரிவாக்க என்ன திட்டம் மற்ற நிர்வாகிகள் வைத்துள்ளீர்கள்?

நிறைய யோசிக்கிறோம். தலைவர் என்ன கட்டளையிடுகிறாரோ அதை செய்வோம், தமிழ், தமிழ் வளர்ச்சி, திராவிட கலாச்சாரம் குறித்து நிறைய கருத்தரங்கங்கள் நடத்த உத்தேசித்துள்ளோம். நூறாண்டு சரித்திரம் அது. கல்வி, வேலை வாய்ப்பு குறித்தும் இளைஞர்கள் மத்தியில் கேம்புகள் நடத்த உள்ளோம்.

தேர்தலில் பணமதிப்பு நீக்கம் போன்ற விவகாரங்களை திமுக பிரச்சாரமாக செய்யவில்லை என்கிற கருத்து வைக்கப்படுகிறதே?

தவறான ஒன்று, எங்களுடைய அடிப்படை பிரச்சாரமே கிராமசபைதான் நான் 80 கிராமசபை கூட்டம் நடத்தினேன். அனைத்து கூட்டங்களிலும் தலைவர் எங்களுக்குச் சொன்னது பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பேசவேண்டும் என்பதுதான்.

“சுருக்குப்பையில் இருந்த எங்கள் வீட்டு பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இரவு 9 மணிக்கு பறித்துச் சென்றுவிட்டார்” என்று பேசவேண்டும் என்று கூறியிருந்தார். நானும் நீங்களும் வெயிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை செல்லாமல் ஆக்கினார்கள், எத்தனை உயிரிழப்பு என்று பேசினோம்.

பேசவில்லை என்பது தவறு, பணமதிப்பு நீக்கத்தைப்பற்றித்தான் அதிகம் பேசினோம், இது தவிர ஜிஎஸ்டி, கேபிள், கேஸ் விலை உயர்வு குறித்து பேசினோம். கிராமசபை கூட்டம் என்பது தலைவர் ஸ்டாலினின் முழுமையான யோசனை. நாங்கள் 234 தொகுதிகளிலும் பேசினோம் முழுமையாக சிறப்பாக நடந்த கூட்டங்கள் அது.

மக்களவை தேர்தலில் என்ன சிறப்பு?

இந்த மக்களவை தேர்தலில் தலித் வாக்குகள் முழுமையாக திமுகவுக்கு... முழுமையாக. கொஞ்சம் விலகி இருக்கிறோமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால் திண்ணைப்பிரச்சாரம் சென்றபோது மக்கள் மிகவும் நெருக்கமாகி வந்தார்கள். அது திமுகவுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in