Published : 13 Sep 2014 09:04 AM
Last Updated : 13 Sep 2014 09:04 AM

பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி சென்னையில் விமானப் பயிற்சி பெற்றவர்: விடுதலைப் புலிகளிடத்தில் பயிற்சி பெற்றதாகவும் தகவல்

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி இங்கு விமானப் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சென்னை சாலிகிராமத்தில் புதன் கிழமை இரவில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி அருண் செல்வராஜன்(28) கைது செய்யப்பட்டார்.

அருண் செல்வராஜன் யார்?

அருண் செல்வராஜின் பெற்றோர் இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வர்கள். அங்கு சொந்தமாக ஓட்டல் வைத்து வசதியாக வாழ்ந்துள்ளனர். அங்கு அடிக்கடி போர் ஏற்பட்டதால் குடும்பத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் சென்னை வந்துவிட்டனர். இதனால் அருண் செல்வராஜன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சென்னையில் படித்தார். அதன் பின்னர் அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் கொழும்புவில் குடியேறினர். கொழும்புவில் வசித்த போதே ‘ஐஸ் ஈவண்ட்' என்ற கலை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தை தொடங்கினார் அருண். இந்நிலையில் ஓட்டல் தொழில் நலிவடைய அருணின் குடும்ப பொருளாதாரமும் இறங்கியது. அடுத்து என்ன செய்வது என்று அருண் திணறிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஆட்டோக்காரர் ஒருவர் மூலம் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தொடர்பு கிடைத்துள்ளது.

அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 2009-ம் ஆண்டு அருண் செல்வராஜன் மட்டும் மாணவர் விசாவில் மீண்டும் சென்னை வந்தார். சாலிகிராமம் ஜே.கே.சாலையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக ஒரு வீடு எடுத்து குடியேறினார். இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு வசதியாக இந்திய பாஸ்போர்ட் ஒன்றையும் ஐ.எஸ்.ஐ. எடுத்து கொடுத்திருந்தது. இலங்கையில் வைத்திருந்த 'ஐஸ் ஈவண்ட்' நிறுவனத்தை அதே பெயரில் சென்னையிலும் தொடங்கினார் அருண். இதற்காக தனி இணையதளத்தையும் உருவாக்கி சென்னையில் பல விஐபிக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

அருணுக்கு கொடுக்கப்பட்ட 2 பணிகள்

தென்னிந்தியாவில் இந்திய ராணுவத்தின் பலம் குறித்த தகவல்களை சேகரிப்பது, தாக்குதல் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது ஆகிய இரண்டும்தான் அருணுக்கு கொடுக்கப்பட்ட பணிகள். ராணுவ பலத்தை அறிய சென்னை அடையாறு கடற்படை தளம், கொச்சி கடற்படை தளம், விசாகப்பட்டினம் நீர்மூழ்கி கப்பல் தளம், பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம் போன்ற தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் இவற்றில் எந்த பகுதியையும் முழுமையாக புகைப்படம் எடுக்கவோ, தகவல் சேகரிக்கவோ அருணால் முடியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் என்பது அவரது லேப்டாப்பில் இருந்த போட்டோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த பணிகளை செய்வதற்குத் தான் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு வங்கி மூலம் ரூ.2 கோடி பணத்தை அருணுக்கு வழங்கியுள்ளது பாகிஸ்தான் உளவுத்துறை.

அருண் செல்வராஜன் வசித்துவந்த வீட்டுக்கு 4 இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்களுக்கும் உளவுப் பணியில் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர். இதனால் அவர்களையும் பிடிக்கும் பணியில் தற்போது இறங்கியுள்ளனர். அவரது இ-மெயில் முகவரியிலும், மொபைல் எண்ணிலும் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அருணின் இந்த செல்போன் எண்ணுக்கு சந்தேகத்துக்கு இடமான அழைப்புகள் அதிகமாக வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீர்மூழ்கி கப்பல் விவரம் கேட்ட ஐ.எஸ்.ஐ.

விசாகப்பட்டினத்தில் ‘அரிஹந்த்' என்ற அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா கட்டி வருகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய தகவல்களை திரட்டித் தருமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் அருணிடம் கேட்டுள்ளனர். இதற்காக ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்துக்கு 2 முறை அருண் சென்று வந்துள்ளார். ஆனால், அவரால் விசாகப்பட்டினத்தில் உள்ள நீர்மூழ்கி கடற்படை தளம் அருகே கூட செல்ல முடியவில்லை.

விமானம் ஓட்ட சென்னையில் பயிற்சி

சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் மூலம் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றிருக்கிறார் அருண். இதற்காக அவர் கொடுத்திருந்த சில விண்ணப்பங்களின் நகல்கள் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்தன. அருணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் உத்தரவின் பேரில்தான் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்ததாக கூறியிருக்கிறார்.

விமானம் ஓட்ட பயிற்சியில் சேர அருண் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதையும் அதிகாரி கள் கண்டுபிடித்துள்ளனர். அருணிடம் இருந்து மேலும் பல முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அருண்

அருண் செல்வராஜன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து மீண்டும் கொழும்பு சென்ற நிலையில், அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உளவுப் பிரிவில் அருண் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சில நாட்கள் விடுதலைப் புலிகளிடத்தில் அவர் பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களைக் கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x