டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
Updated on
2 min read

டிஎன்பிஎஸ்சி-யின் 6,491 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை ஏழை மாணவர்களுக்காக  டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்  நடத்துகிறது.

இது குறித்து டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தால் கடந்த ஜூன்14 அன்று அறிவிக்கப்பட்ட  குரூப்-4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் -14 முதல் தொடங்கியது.

வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் இதர அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட எட்டு விதமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால் அவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. தகுதியுடைய நபர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் ( www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஜூலை 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தாலே போதுமானது. நேர்முகத்தேர்வு கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

குரூப்- 4 தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்பை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அனைத்து  தலித்துகள் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏனைய பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து மாணவர்களும்  பயன்பெறும் வகையில் திட்டமிட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்  வகுப்புகளை நடத்தத் திட்டமிடுகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக இது போன்ற பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வகுப்பில் பயின்ற 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் சேர்ந்து சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

சென்னையில் பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் – 22 -ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் தொடங்குகிறது. வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

நடைபெறும் இடம். எண்.6/9. CITU அலுவலக கட்டிடம், கச்சாலீசுவரர் கோயில் அக்ரஹாரம், அரண்மனைக்காரன் தெரு, பாரிமுனை, சென்னை-1.

பயிற்சி பெற  விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்.

பாலாஜி. 98847 47217, மோகன். 93449 51475, வாசுதேவன். 94446 41712.

இலவசமாகப் பயிற்சி பெற விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் பங்குபெற்று தேர்வெழுதும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

வகுப்பிற்கு வரும்போது மார்பளவு போட்டோவும், குரூப்-4  தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலையும் கொண்டு வர வேண்டும்''.

இவ்வாறு வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in