காயிதே மில்லத் 124-வது பிறந்த நாள்: துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

காயிதே மில்லத் 124-வது பிறந்த நாள்: துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை

Published on

காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரும் வளர்மதி, கோகுல இந்திரா, பொன்னையன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளி வாசலில் காயிதே மில்லத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. ஜூன் 5-ம் தேதி அவரின் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை முதல் ஏராளமான அரசியல் கட்சியினர் இங்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து துணை முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

காயிதே மில்லத்

தனது உயர்ந்த பண்பின் காரணமாக அமைந்த பெயராலேயே இறுதிவரை அழைக்கப்பட்ட தலைவர் ‘காயிதே மில்லத்’. முகமது இஸ்மாயில் என்பதுதான் அவரது இயற்பெயர். ஆனால், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், ‘காயிதே மில்லத்’ என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்’ என்று இதற்குப் பொருள்.

தலைவர்களால் மதிக்கப்பட்டவர்

தந்தை பெரியார் முதல் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி வரை எல்லாத் தலைவர்களும் காயிதே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். முகமதியக் கல்லூரிக்கு காயிதே மில்லத்தின் பெயரையே சூட்டினார், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1983-ல் காயிதே மில்லத்தின் வாழ்க்கை பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தார்.

காயிதே மில்லத் மறைந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட புதுக் கல்லூரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய எம்ஜிஆர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்தே வந்தார்.நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத்தின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா..

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in