Last Updated : 03 Jun, 2019 12:00 AM

 

Published : 03 Jun 2019 12:00 AM
Last Updated : 03 Jun 2019 12:00 AM

மக்களை கவரும் வட்டி, பாதுகாப்பான முதலீடு காரணமாக அஞ்சலக சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: 2018-19-ம் ஆண்டில் சென்னை நகர மண்டலத்தில் 3.19 லட்சம் கணக்குகள் தொடக்கம்

மக்களைக் கவரும் வட்டி விகிதம், பாதுகாப்பான முதலீடு உள்ளிட்ட காரணங்களால், அஞ்சலகங்களில் தொடங்கப்படும் சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2018-19 நிதியாண்டில்மட்டும் சென்னை நகர மண்டலத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் புதிதாக 3.19 லட்சம்சேமிப்புக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. இதன்மூலம், 55.76 லட்சமாக இருந்த சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை 58.95 லட்சமாக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க நினைத்தால், அவர்களது முதல் விருப்பமாக இருப்பது அஞ்சலகங்கள்தான். அதற்கு அடுத்தபடியாக வங்கிகள் உள்ளன. தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக அளவு வட்டி தருவதாகக் கூறினாலும், அஞ்சலகங்களைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.

அஞ்சலகங்களில் சேமிக்கப் படும் தொகைக்கு முழு பாதுகாப்பு இருப்பதும், அவர்களைக் கவரும்விதமாக வட்டி இருப்பதும் அதற்குக் காரணமாகும். இதனால் அஞ்சலகங்களில் தொடங்கப்படும் சேமிப்புக் கணக்குகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

அனைவருக்கும் நிதிப் பலன்

நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் நிதிப் பலன்கள் கிடைக்கவேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, அனைவருக்கும் வங்கிக் கணக்கைத் தொடங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அஞ்சல்துறையும் வீட்டுக்கு ஒருவர் அஞ்சலக சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அஞ்சலக சேமிப்புக் கணக்கைத் தொடங்க அஞ்சல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, அஞ்சலகசேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.

கடந்த மார்ச் 31-ம் தேதிவரை சென்னை நகர மண்டலத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களின்மொத்த சேமிப்புக் கணக்குகளின்எண்ணிக்கை 58.95 லட்சமாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 55.76 லட்சமாக இருந்தது. அதாவது, 3.19 லட்சம் புதியசேமிப்புக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. இந்த 58.95 லட்சம் சேமிப்புக் கணக்குகளில், 24.74 லட்சம் சேமிப்புக் கணக்குகள் சென்னை நகரில் உள்ள அஞ்சல்நிலையங்களில் தொடங்கப்பட் டவை. 2018-19-ம் ஆண்டில் 2.74லட்சம் சேமிப்புக் கணக்குகள் புறநகர் மற்றும் கிராமப்புற அஞ்சல கங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

11.3 % வருவாய் அதிகரிப்பு

சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் மூலம் வருவாயும் அதிகரித்துள் ளது. 2017-18-ம் ஆண்டில் ரூ.121.15கோடியாக இருந்த வருவாய், 2018-19-ம் ஆண்டில் ரூ.134.84 கோடி யாக அதிகரித்துள்ளது. அதாவது, 11.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, காலமுறை வைப்புநிதி (டைம் டெபாசிட்) கணக்கு களின் எண்ணிக்கை மட்டும் கடந்தஆண்டு குறிப்பிடத்தக்க அளவுஅதிகரித்துள்ளது. இதன்படி, இந்தக் கணக்குகள் 42 சதவீதம் வளர்ச்சி அடைந்து4.54 லட்சமாக உள்ளது. இந்தக் கணக்கில் செய்யப்படும் முதலீட்டுக்கு வங்கியை விட அதிகப்படியான வட்டி வழங்கப்படுகிறது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை ஆண்டு ஒன்றுக்கு தலா 7 சதவீதமும், 5 ஆண்டுக்கு 7.8 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புக் கணக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் மூத்த குடிமக்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்து, ஒரு லட்சமாக உள்ளது. இந்த சேமிப்பு கணக்குக்கு ஆண்டு ஒன்றுக்கு 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தக் கணக்கைத் தொடங்க விரும்பும் மூத்த குடிமக்கள் 55 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் முதலீட்டுத் தொகை, அவர்களுக்கு கிடைத்த ஓய்வூதிய பலன் தொகையைவிட அதிகமாக இருத்தல் கூடாது.

இதற்கு அடுத்தபடியாக, செல்வமகள் சேமிப்புக் கணக்கு அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளின் எண்ணிக்கைஅதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 13 சதவீதம் அதிகரித்து, 5.78 லட்சமாக உள்ளது. இந்த சேமிப்பு கணக்குக்கு ஆண்டு ஒன்றுக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும்வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஸ்பான்சர்கள் செய்த உதவி காரணமாக இந்த சேமிப்புக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேபோல், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) கணக்கும் கடந்த ஆண்டு 12.5 சதவீதம் அதிகரித்து 1.81 லட்சமாக உள்ளது. இந்த சேமிப்புக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அத்துடன், வருமானவரிச் சட்டம், பிரிவு 80-சியின்கீழ், இந்த சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டித் தொகைக்கு முழு வரி விலக்கும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x