Published : 10 Sep 2014 11:58 AM
Last Updated : 10 Sep 2014 11:58 AM

காஞ்சி அருகே பரவும் மர்ம காய்ச்சல்: சுகாதாரத்துறை முகாமிட்டு தீவிர சிகிச்சை

காஞ்சிபுரம் அடுத்த பெருநகர் கிராமப் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால், அந்த கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகர் ஊராட்சியில் உள்ள தலையாரி தோப்பு கிராமத்தில் 15-க்கும் மேற்பட் டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப் பட்டனர். இதைத் தொடர்ந்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள், மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க் கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

எனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை. அதற்கு மாறாக அவர்களுக்கு கடும் உடல்வலி ஏற்பட்டது.

அதே கிராமப் பகுதியில் மேலும் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர், செவ்வாய்க்கிழமை முதல் பெருநகர் ஊராட்சி பகுதியில் மருத்துவ முகாமிட்டு, காய்ச்சல் உள்ள நபர்களிடம் ரத்த மாதிரிகளை சேகரித்தும், உயர் சிகிச்சை அளித்தும் வருகின்றனர். இதனால், பெருநகர் கிராமப் பகுதியில் எலி காய்ச்சல் பரவி உள்ளதாக கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கூறியதாவது: ‘மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 கிராமவாசிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பினோம். இதில், 2 நபர்களுக்கு மட்டும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெருநகர் ஊராட்சி தலைவரிடம், ஊராட்சியில் அனைத்து குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து, குளோரின் பவுடர் கலந்து குடிநீரை விநியோகிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். கிராமப் பகுதியில் குழாய்கள் உள்ள இடங்களில் குழி தோண்டி குடிநீர் பிடித்து வருகின்றனர். அதனால், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாதுகாப்பான முறையில் குடிநீரை பிடிக்குமாறும் குடிநீரை காய்ச்சி பருகுமாறும் அறிவுறுத்தியுள்ளோம்.

காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சிகிச்சை அளிக்குமாறு வட்டார மருத்துவ அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளோம். அதனால், பெருநகர் கிராமப் பகுதியில் நிலைமை சீரடைந்து வருகிறது’ என்றார்.

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 கிராமவாசிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில், 2 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x