Published : 11 Jun 2019 11:06 AM
Last Updated : 11 Jun 2019 11:06 AM

தண்ணீர்ப் பஞ்சத்தால் தவிக்கும் தமிழகம்; போர்க்கால வேகத்தில் செயல்படுக: வைகோ

தண்ணீர்  பஞ்சத்தை தடுக்க போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி, 22 மாவட்டங்களுக்கு மேல் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர்  பஞ்சத்தால் மக்கள் தவிக்கின்ற நிலைமை வேதனை அளிக்கின்றது. நாள்தோறும் குடிநீருக்காக பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் செய்திகள் பத்திரிகை, ஊடகங்கள் மூலம் வெளியாகி வருகின்றன.

சென்னை பெருநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த ஆண்டில் 3872 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. தற்போது ஜூன் 4 ஆம் தேதி நிலவரப்படி 261 மில்லியன் கன அடி நீர்தான் இருக்கிறது. நாளொன்றுக்கு சென்னை மக்களின் தாகத்தைப் போக்க 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், மாநகர குடிநீர் வாரியம் தற்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் விநியோகிக்கிறது.

வீராணம் ஏரியிலிருந்து அனுப்பப்படும் குடிநீர், கடல் நீரை குடிநீராக்கி விநியோகம் செய்யப்படும் நீர், விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை 900 லாரிகள் மூலம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை சென்னையில் விநியோகம் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்.

தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் கேன் வாட்டர் விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டன. குடியிருப்புகளில் அன்றாடத் தேவைக்காக விலைக்கு வாங்கும் நீரை லாரி நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்திவிட்டன.

குடிநீரையும், மற்ற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையையும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உயர்த்திக் கொள்ளை லாபம் அடிப்பதை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு முறைப்படுத்த வேண்டும்.

பருவ மழை பொய்த்து, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு போவதையும், நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்குக் கீழே போனதையும் தமிழக அரசு முன்கூட்டியே கணித்துத் தக்க ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதால்தான் இன்று சென்னை மக்கள் தண்ணீருக்குத் தவித்து நடுத்தெருவில் போராடும் நிலைமையை உருவாகி இருக்கின்றது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சுற்றி 3,600 நீர்நிலைகள் உள்ளன. அவற்றை முறையாக தூர் வாரி பராமரித்திருந்தால் 80 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியும். பெய்த சொற்ப மழை நீரும் அரசின் அலட்சியப் போக்கால் வீணானது.

தமிழகம் முழுவதும் குடிநீர் இன்றி மக்கள் அல்லல்பட்டுத் துடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், கோடைகால குடிநீர் விநியோகத்துக்காக 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கடந்த 7 ஆம் தேதிதான் உள்ளாட்சித்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

தமிழக அரசு இயந்திரம் போர்க்கால வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்தித் தண்ணீர்  பிரச்சினையைத் தீர்க்க விரைந்து செயலாற்ற வேண்டும்", என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x