Last Updated : 27 Jun, 2019 02:44 PM

 

Published : 27 Jun 2019 02:44 PM
Last Updated : 27 Jun 2019 02:44 PM

அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக வழங்கிய சம்பளம், ஓய்வூதியத்தை பிடிக்க நடவடிக்கை: தலைமை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக வழங்கிய சம்பளம், ஓய்வூதியம், சம்பள பாக்கியை திரும்ப வசூலிப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து 30.9.1996-ல் ஓய்வு பெற்றவர் சுப்புராஜ். 

இவருக்கு  ஊதியம் மற்றும் ஓய்வூதியம் நிர்ணயம் செய்ததில் தவறு நேர்ந்ததாகவும், கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திரும்ப வசூலிக்க  கருவூலத்துறை அலுவலர் 15.10.2015-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து தன்னிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.6152 திரும்ப வழங்கக்கோரி சுப்புராஜ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

ஓய்வு பெற்ற ஊழியர்களாக இருந்தாலும் கூடுதல் ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் பெற உரிமையில்லை. அதே நேரத்தில் அரசு ஊழியர்களின் பணி உரிமையை பாதிக்கும் வகையில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வாய்ப்பு வழங்காமல் பிறப்பிக்கக்கூடாது.

மனுதாரருக்கு தற்போது 81 வயதாகிறது. இனிமேலும் அவரது ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்தால் மனுதாரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சம்பள பாக்கி தொகையை திரும்ப வசூலிப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை தலைமை செயலர் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x