விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து ஆபத்தான முறையில் சாலையை கடந்த பயணிகள்: அடுத்து வந்த பேருந்து மோதி 3 பேர் பலி

விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து ஆபத்தான முறையில் சாலையை கடந்த பயணிகள்: அடுத்து வந்த பேருந்து மோதி 3 பேர் பலி
Updated on
2 min read

சூளகிரி அருகே விபத்துக்குள்ளாகி நின்ற பேருந்திலிருந்து ஆபத்தான முறையில் இறங்கி சாலையை கடந்த பயணிகள் மீது பின்னால் வந்த பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் அந்தப் பேருந்தின் மீது லாரி மோதியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

இன்று காலை 4.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அரசு பேருந்து ஒன்று  சென்று கொண்டிருந்தது . இந்தப் பேருந்து சூளகிரி அருகே  வந்த போது திடீரென்று பஸ்ஸின் முன்புற சக்கர இணைப்புகள் மொத்தமாக  கழன்று ஓடியதால் பேருந்து சாலையில் வலது புறம் சாலை தடுப்புகளில் மோதி நின்றது.

திடீர் விபத்தால் பஸ்சில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர் பயத்துடன் பஸ்ஸிலிருந்து வேகமாக இறங்கி சாலை ஓரத்திற்கு சென்றனர் சாலையில் இருக்கும் ஆபத்தை அறியாமல் அதிகாலை இருட்டில் பயணிகள் விபத்தான பேருந்திலிருந்து அடுத்தடுத்து இறங்கி சாலையை கடந்தனர்.

அந்த நேரம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி புதிய அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது .  அந்தப்பேருந்து ஓட்டுநர் இதை கவனித்து அவர்கள் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் அடித்து பேருந்தை நிறுத்த முயன்றார்.      

அந்த நேரம் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி பிரேக் அடித்துநின்ற புதிய அரசு பேருந்தின் மீது பயங்கரமாக பின்புறமாக மோதியது . மேலும் முன்னாள் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து  மீதும் மோதி கவிழ்ந்தது .

லாரி பேருந்து மீது மோதிய வேகத்தில்  சாலையை கடக்க முயன்ற  பயணிகள் மீது பேருந்து மோதியதில்  2 பெண்கள் உட்பட 3 பயணிகள்  சம்பவ இடத்திலேயே பலியானார்கள் .

இரண்டாவதாக வந்த பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர் . மேலும் பேருந்து மீது மோதி கவிழ்ந்த லாரியில் இருந்த ஓட்டுனர் மற்றும் கிளீனர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .

இந்த விபத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மூன்று வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் . இதற்காக ராட்சத கிரேன்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து பதற்றத்துடன் சாலையை கடக்க ஓடியதால் நெடுஞ்சாலையில் பயணிகள் உயிரை இழக்கும் சூழல் ஏற்பட்டது,  அடுத்தடுத்த வாகனங்களும் விபத்தில் சிக்கும் நிகழ்வும் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in