Published : 15 Jun 2019 05:41 PM
Last Updated : 15 Jun 2019 05:41 PM

சென்னையில் தினமும் 9100 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம்: அமைச்சர் வேலுமணி தகவல்

சென்னையில் தினமும் 9100 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

சென்னை மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, "2017-ம் ஆண்டு தமிழகத்தில் மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்போதும் அரசு நிலைமையை சமாளித்தது.

ஆனால், சென்னையில் கடந்த ஆண்டு மழை பெய்யவில்லை. இந்நிலையில் தண்ணீர் தேவையை சமாளிக்க சென்னையில் தினமும் 520 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இதுதவிர சென்னையில் தினமும் 9100 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கிராம பஞ்சாயத்துகளுக்குக் கூட லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகித்து வருகிறோம். மழை குறைவு காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது, தண்ணீர் இருக்கும் இடங்கள் ஆராயப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சி ஆட்சியிலும்கூட வறட்சி வந்திருக்கிறது. ஆனால், அவர்களைவிட நாங்கள் சிறப்பாக தண்ணீர் பிரச்சினையை சமாளித்து வருகிறோம். தமிழக அரசு ரூ.15,000 கோடிக்கு மேல் தண்ணீர் மேலாண்மை தொடர்பான பணிகள் நடைபெற்று இருக்கின்றன.

இதுதவிர கூட்டுகுடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு நகரம் தொடங்கி ஊரகப் பகுதிவரை நடத்தியிருக்கிறது. அதனால், எதிர்க்கட்சியினர் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால், நாங்கள் நிலைமைய சமாளித்து மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கிறோம் என்பதுதான் உண்மை.

தண்ணீர் இருக்கும் இடங்கள் ஆராயப்பட்டு வருகிறது. அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் கண்டறிந்து சொல்லும் இடங்களில் போர் அமைக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x