Published : 22 Jun 2019 10:51 AM
Last Updated : 22 Jun 2019 10:51 AM

தண்ணீர் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தி எதிர்க்கட்சிகள் விளம்பரம் தேடிக்கொள்ளக் கூடாது: ஜி.கே.வாசன்

எதிர்க்கட்சிகள் தண்ணீர் பிரச்சினையை அரசியலாக்கி, ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று விளம்பரம் தேடிக்கொள்ளக் கூடாது என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க எடுத்து வரும் நடவடிக்கையை இன்னும் வேகப்படுத்திட வேண்டும். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது என்பது இயற்கையானது அல்ல செயற்கையானது என்றாலும் கடந்த 50 ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவி வருகிறது. இப்பிரச்சினையைப் போக்க நீண்ட கால திட்டங்களை வகுத்து செயல்படுத்தி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதாவது கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இப்பொறுப்பு இருந்திருக்கிறது. இச்சூழலில் இப்போதைய அரசு தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது என்றாலும் கூட இன்னும் அப்பணிகளை வேகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போது ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டிருப்பதும், ஆலோசனை செய்து பிற வழிகளில் தண்ணீர் கொண்டு வர முயற்சிப்பதும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எதிர்க்கட்சிகள் நியாயமான முறையில் அரசுக்கு குரல் கொடுக்கலாம். எதிரக்கட்சிகள் தண்ணீர் பிரச்சினையை அரசியலாக்கி, ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்பதை தவிர்த்து, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தால் தமிழக மக்களுக்கு நல்லது.

அதாவது தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக வெற்றி பெற்றிருக்கின்ற எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரு சேர நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக குரல் கொடுத்து நிதியை கூடுதலாக ஒதுக்கச் சொல்லி, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடவும் வலியுறுத்தலாம். இது தான் இன்றையச் சூழலில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு தமிழக எதிர்கட்சி எம்பிக்கள் மேற்கொள்ள வேண்டிய பணியாக இருக்க முடியும். அதனை ஏன் செய்யவில்லை?

எனவே நாளை மறுநாள் திங்கள் அன்று மீண்டும் கூட இருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசிடம் தமிழக எம்பிக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டுக்காக நிதி ஒதுக்கவும் தண்ணீர் தட்டுப்பட்டை போக்கவும் ஒரு சேர குரல் கொடுக்க வேண்டும். இது அரசியல் பிரச்சினை அல்ல தமிழக மக்களுக்கான அவசர, அவசியப் பிரச்சனை என்பது தான் உண்மை நிலை", என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x