Published : 17 Jun 2019 15:20 pm

Updated : 17 Jun 2019 15:20 pm

 

Published : 17 Jun 2019 03:20 PM
Last Updated : 17 Jun 2019 03:20 PM

போலி ஆதரவற்றோர் இல்லம் நடத்தி ரூ.11.5 லட்சம் திருட்டு: பெண் கைது, போலி நிருபர் தலைமறைவு

11-5

ஆதரவற்றோர் இல்லம்போல் போலியாக நடத்தி பழைய துணிகள், பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை சேகரித்து அமைப்பின் பெண் பணியாளர் ஒருவீட்டில் 11.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலை மறைவானார். அவரை கைது செய்த போலீஸார் அதன் உரிமையாளரான போலி பத்திரிகையாளர் ஒருவரை தேடி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை ரவி(40). இவரது மனைவி சுசீலா(38). ரவி தள்ளுவண்டியில் துணிகளை இஸ்திரிபோட்டுத்தரும் பணியும், சுசிலா வீட்டுவேலையும் செய்து வந்துள்ளனர். வீடு கட்டுவதற்காக சுசிலா சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளார்.


திருட்டுப்பயத்தினால் பணத்தை பழைய துணிகளுடன் மூட்டையாக கட்டி பீரோவில் வைத்திருந்துள்ளார். பிள்ளைகளிடம் எதற்கும் உதவாத பழைய துணிகள் என்று கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி தேனாம்பேட்டைக்கு ஆட்டோவில் வந்த சிலர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகில் அம்மா டிரஸ்ட் என்கிற பெயரில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம் நடத்தி வருவதாகவும் பழைய துணிகள், பணம் , பொருள் இருந்தால் தரவேண்டும் என நோட்டீஸ் வழங்கி வீடுவீடாக கேட்டுள்ளனர்.

இதை உண்மை என நம்பி பலரும் பணம், பொருள், பழைய துணிகள், மளிகை பொருட்களை கொடுத்துள்ளனர். இதேபோல் சுசிலாவின் வீட்டிலும் கேட்டுள்ளனர். வீட்டில் சுசிலாவும், அவரது கணவரும் இல்லாத நிலையில் மகன் ரவி மட்டும் இருந்துள்ளார்.

அவர் வீட்டில் அம்மா பழைய துணிகளை மூட்டையாக கட்டி வைத்துள்ளாரே அதை ஏழைகளுக்கு கொடுத்துவிடலாம் என எடுத்து கொடுத்துள்ளார்.

மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய சுசிலா பழைய துணி மூட்டையை பீரோவில் காணாது அதிர்ச்சியடைந்து மகன் ரவியிடம் கேட்டுள்ளார். பழைய துணி தானே ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து கேட்டு வந்தார்கள் அவர்களுக்கு உதவ கொடுத்தேன் என கூறியுள்ளார் மகன்.

இதைக்கேட்டு அலறி துடித்த சுசிலா அதில் தமது சேமிப்புப்பணம் ரூ.11.5 லட்சம் இருப்பதை மகனிடம் கூறி அதை எடுத்து வைத்தாயா என கேட்டுள்ளார். இல்லை, அப்படியே மூட்டையை பிரிக்காமல் கொடுத்தனுப்பி விட்டேன் என மகன் கூற யார் அவர்கள் என கேட்டபோது அவர்கள் கொடுத்த நோட்டீசை மகன் காண்பித்துள்ளார்.

அந்த நோட்டீஸில் உள்ள விலாசத்திற்கு சென்று பார்த்தபோது அது ஒரு பயன்படுத்தப்படாத கட்டிடம் என்பதும் அங்கு எந்த ஆதாரவற்றோர் இல்லமும் செயல்படவில்லை, அது போலி நோட்டிஸ் என தெரிய வந்துள்ளது. உரிமையாளர்கள் யார் என்பதும் தெரியவைல்லை. இதனால் அதிர்ச்சியில் உறைந்த கணவன் மனைவி இருவரும் உடனடியாக தேனாம்பேட்டை போலீஸில் நடந்ததைக்கூறி புகார் அளித்துள்ளனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய தேனாம்பேட்டை போலீஸார், சுசிலாவின் வீட்டருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்துள்ளனர். அதில் ஒரு பெண் துணிமூட்டையை வாங்கிச் செல்வதும், பின்னர் ஆட்டோவில் செல்வதும் பதிவாகி இருந்தது.

ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்தபோது செங்குன்றத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனது ஆட்டோவை வாடகைக்கு எடுத்து பழைய துணைகளை சேகரித்து எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.

 

அவர் அடையாளம் காட்டியப்படி செங்குன்றம் பகுதியில் இருந்த மகாலட்சுமியைப் போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரது வீட்டிலிருந்து ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மகாலட்சுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பணம், காசோலை மற்றும் பழைய துணிகளைப் பெற்று பணம் சம்பாதிக்க சென்னையில் ஒரு பெரிய நெட்வர்க் செயல்படுவது தெரிய வந்துள்ளது. பொதுமக்களின் இரக்கக்குணம்தான் இவர்களது மூலதனம்.

அரவிந்தன் என்கிற நபர் பெண்களை வேலைக்கு அமர்த்தி இதுபோன்று பணம், பழைதுணிகள், பொருட்களை வசூல் செய்து பணத்தை வாரத்திற்கு ஒரு முறை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளவும், பழைய துணிகளை மொத்த ஏஜெண்டுகளிடம் விற்று பணம் சம்பாதிப்பதும்தெரியவந்தது.

இந்த கும்பல், வேலையில்லாமல் இருக்கும் ஏழைப் பெண்களை வேலைக்கு அமர்த்தி தாங்கள் கொடுக்கும் துண்டுப் பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று கொடுத்து பணம் துணிகளை பெறுவதற்கு பயிற்சி அளித்து பொதுமக்களின் இரக்க உணர்வை பயன்படுத்தி பணம் பார்த்து வந்துள்ளனர்.

அம்மா அறக்கட்டளை அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவு செய்யபட்டுள்ளதையும், அந்த நபர் மக்கள் நம்பிக்கை என்ற வாரஇதழை நடத்தி வருவதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அரவிந்தன் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப்பிரிவில் வேலைப்பார்த்ததும், அங்கு அவரது நடத்தைச் சரி இல்லாததால் வெளியேற்றப்பட்டதும், பின்னர் தானே பத்திரிகை ஆரம்பித்து காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், தலைமைச் செயலகம் போன்ற இடங்களில் நுழைந்து பலரது அறிமுகத்தை பெற்றுள்ளார்.

காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு போலி அறக்கட்டளை நடத்தி பண வசூலில் ஈடுபட்டு பொதுமக்களிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

மகாலட்சுமியை கைது செய்த தேனாம்பேட்டை போலீஸார் பணம் ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள போலி பத்திரிகையாளர் அரவிந்தனைத் தேடி வருகின்றனர்.

ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்கிற பொதுமக்களின் நல்ல எண்ணத்தை மூலதனமாக்கி மோசடியில் ஈடுபட்ட அரவிந்தன் முக்கியமாக நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியிலேயே தனது ஆட்களை அனுப்பி வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்.


ஆதரவற்றோர் இல்லம்போலி பத்திரிகையாளர்பொதுமக்களிடம் மோசடி 11.5 லட்சம் திருட்டுபெண் கைது போலி நிருபர் தலைமறைவு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x