

தனது வீட்டருகில் சந்தேகத்திற்கிடமாக 10 நாட்களாக நின்ற டிரக் குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட உடனடியாக அவரிடம் இடத்தை கேட்ட சென்னை போலீஸார் வாகனத்தை அகற்றினர், போலீஸின் செயலியை பதிவு செய்யவும் ஆலோசனை கூறியுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் குஷ்புவின் வீடு அமைந்துள்ளது. அவரது வீடு உள்ள தெருவில் கடந்த 10 நாட்களாக கண்டெய்னருடன் கூடிய டிரக் ஒன்று நிற்பதை குஷ்பு பார்த்துள்ளார்.
அந்த ட்ரக்கின் நெம்பர் பிளேட்டில் பதிவெண் இல்லாததால் சந்தேகம் கொண்ட அவர் அதுதொடர்பாக கடந்த 22-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். “இந்த ட்ரக் கடந்த 10 நாட்களாக சந்தேகத்திடமளிக்கும் வகையில் நிற்கிறது, எந்த ஒரு குடிமகனும் இதுகுறித்து கேள்விஎழுப்பவோ புகாரளிக்கவோ வரவில்லை.
வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாதது சந்தேகத்தை கிளப்புகிறது. சென்னை போலீஸார் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு சில மணி நேரத்திலேயே சென்னை போலீஸார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருந்தனர். லொக்கேஷனை போடுங்கள் மேடம் என கேட்டிருந்தனர்.
குஷ்புவின் பதிவுக்கு கீழ் நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்திருந்தனர். எந்த ஒரு குடிமகனும் கேள்வி கேட்கவில்லை என குஷ்பு பதிவிட்டிருந்ததற்கு நீங்களும் ஒரு குடிமகள்தான் மேடம், நீங்களும் பதிவிடலாம் என தெரிவித்திருந்தனர்.
ஒரு நபர் மோடி உங்களை கண்காணிக்கிறார் என கிண்டலாக பதிவிட்டிருந்தார். சிலர் அது புத்தம் புதிய டிரக் அதற்கு புதிய நம்பர் வர தாமதமாகும், அதனால் நம்பர் பிளேட் இல்லை என விளக்கம் அளித்திருந்தனர்.
இதற்கு கோபமாக பதிலளித்துள்ள குஷ்பு “அந்த டிரக் எனது தெருவில் நிற்கவில்லை, ஆனால் அதுப்பற்றி பதிவிட்டுள்ள என்னை கேலிக்கிண்டல் செய்பவர்களுக்கும், என்னை புகார் அளிக்க சொல்பவர்களுக்கும் ஒன்று சொல்கிறேன் ஒன்று ரிட்வீட் செய்யுங்கள், அல்லது இடத்தைக்காலி செய்யுங்கள்” என கோபமாக பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் “மேடம் அது உங்கள் தெருவல்ல என பொது வாழ்க்கையிலிருந்துக் கொண்டு கூறக்கூடாது. முதலில் நீங்கள் லோக்கல் போலீஸுக்கு அழைத்துச் சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து ட்விட்டரில் பதிவிட்டு ஏன் விளம்பரம் தேடுகிறீர்கள், இதெல்லாம் பப்ளிக் ஸ்டண்ட்” என விமர்சித்துள்ளனர். ஆனால் பல நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.
ஆனால் கடமை தவறாத போலீஸார் அந்த டிரக்கை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் குஷ்பூவுக்கு ஆலோசனை ஒன்றையும் போலீஸார் வழங்கியுள்ளனர். சென்னை போக்குவரத்து காவல்துறையின் GCTP என்ற செயலியை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுமாறும் அதன்மூலம் குற்றங்கள் தொடர்பான புகைப்படத்துடன் புகார் அளிக்க முடியும் என்றும் போலீஸார் குஷ்புவுக்கு தெரிவித்துள்ளனர்.
போலீஸார் உடனடியாக வாகனத்தை அப்புறப்படுத்தியதை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.