அறம் பழகு எதிரொலி: ராகவனின் மகள் வாணிஸ்ரீயின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்த இந்து தமிழ் வாசகர்கள்!
படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.
*
இதில் கூடைப்பந்து பயிற்சியாளராக இருந்தபோது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தற்போது பள்ளியில் வாட்ச்மேனாக இருக்கும் ராகவன் குறித்த செய்தி வெளியாகி இருந்தது. அதில் ராகவனின் மகள் 12-ம் வகுப்புக்குச் செல்ல ரூ.33 ஆயிரம் தேவைப்பட்டது குறித்து சொல்லப்பட்டிருந்தது. இச்செய்தியைப் படித்த இந்து தமிழ் வாசகர்கள், வாணிஸ்ரீக்குத் தேவையான தொகை ரூ.33 ஆயிரத்தை விட அதிகமாகவே தந்து உதவியுள்ளனர்.
செய்தி வெளியான நாளில் இருந்து இதுவரை ரூ.80 ஆயிரத்துக்கும் அதிகமாக உதவிகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் உற்சாகத்துடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளார் வாணிஸ்ரீ.
இதுகுறித்து அவர் பேசும்போது, ''ரொம்ப சந்தோசமா இருக்குக்கா. கையில காசில்லாம, ஸ்கூலை விட்டே நிறுத்திடலாம்னு வீட்ல முடிவு பண்ணிட்டாங்க. சரி கடைசி முயற்சியா 'இந்து' பத்திரிகைல பேசலாம்னு அப்பா ட்ரை பண்ணாரு.
இப்போ எல்லோரும் சேர்ந்து என்னை ஸ்கூல் போக வச்சுட்டீங்க. படிச்சு கண்டிப்பா நல்ல நிலைமைக்கு வருவேன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!'' என்று நெகிழ்ச்சியாகப் பேசுகிறார்.
மகளுக்குத் தேவையான உதவி கிடைத்தது குறித்துப் பேசிய ராகவன், ''இவ்ளோ சீக்கிரம் இத்தனை பெரிய தொகை கிடைக்கும்னு நெனச்சுப் பார்க்கலைங்க. கேட்டதைவிடக் கூடுதலாவே 'இந்து' வாசகர்கள் குடுத்திருக்காங்க.
33 ஆயிரம் ரூபாய் ஃபீஸைக் கட்டிட்டோம். மிச்ச பணத்துல புக்ஸ், யூனிஃபார்ம் வாங்கியாச்சு. உசுர் உள்ள வரைக்கும் இந்து தமிழை மறக்க மாட்டேன்'' என்கிறார்.
இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் 'இந்து தமிழ் திசை' இணையதளம் பெருமை கொள்கிறது. வாணிஸ்ரீக்குத் தேவையான உதவிகள் கிடைத்துவிட்டன. இனி தேவை உள்ள பிறருக்கு வாசகர்கள் உதவலாம்.
க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
