Published : 06 Jun 2019 12:47 PM
Last Updated : 06 Jun 2019 12:47 PM

உயிரிழந்த காவலாளியின் சடலத்துக்கு இறுதிச் சடங்கு செய்வதில் 2 மனைவிகளிடையே வாக்குவாதம்: போலீஸார் சமரசம்

கோவையில் உயிரிழந்த காவலாளியின் சடலத்துக்கு இறுதி சடங்கு செய்வதில், 2 மனைவிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீஸார் சமரசப்படுத்தினர்.

கோவை லாலி சாலையில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழக ஊழியர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (44). இவர், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காவலாளி யாக பணியாற்றி வந்தார்.

இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சாயிபாபா காலனி போலீஸார் விசாரித்தனர். உயிரிழந்த செந்தில்குமாரின் முதல் மனைவி விஜயா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த செந்தில்குமார், 2-வதாக மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

உயிரிழந்த செந்தில்குமாரின் சடலத்துக்கு இறுதி சடங்கு செய்வதற்காக அவரது சடலத்தை 2-வது மனைவி மகேஸ்வரி பெற்றுக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.

அந்த வீட்டுக்கு அவரது முதல் மனைவி விஜயாவும் தன் மகளுடன் வந்தார். அப்போது விஜயாவுக்கும், மகேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து, ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான சாயிபாபா காலனி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

சட்டம் ஒழுங்கு பாதிப்பை தடுக்க, போலீஸார் செந்தில்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 2 மனைவிகளிடமும் போலீஸார் விசாரித்தனர். செந்தில்குமாரின் சடலத்துக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு தங்களுக்குத்தான் உரிமை உள்ளது என இருவரும் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர்.

பின்னர், ‘‘செந்தில்குமாரின் சடலத்தை ஆத்துப்பாலத்தில் உள்ள மின் மயானத்தில் வைத்து தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். யாருடைய வீட்டுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது. விஜயாவின் மகள் இறுதிச்சடங்கு செய்யலாம். மற்ற சடங்குகளை மின் மயானத்திலேயே முடித்துக் கொள்ள வேண்டும்,’’ என போலீஸார் உத்தரவிட்டனர். இதை இருதரப்பினரும் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அங்கு நிலவிய பிரச்சினை முடிவுக்கு வந்தது.சடலத்தை ஆத்துப்பாலத்தில் உள்ள மின் மயானத்தில் வைத்து தான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். யாருடைய வீட்டுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x