

வெயிலின் தாக்கம், குறைந்த மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் வனப் பகுதிகளில் உள்ள வனக் குட்டைகள் வறண்டுபோயுள்ளன. இதனால், தாகத்தில் தவிக்கின்றன வன விலங்குகள். எனவே, காட்டையொட்டியுள்ள பகுதிகளில் கட்டுப்பாடின்றி ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்தப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழையின்மை, கோடைக்காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிப்பு போன்றவை மனிதர்களை மட்டுமின்றி, காட்டுயிர்களையும் பெரிதும் பாதித்துள்ளது.
காடுகளில் உள்ள இயற்கையான நீராதாரங்கள்தான், விலங்குகளுக்கான தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை என ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் உள்ள நிலையில், பெரும்பாலான நீராதாரங்கள் தற்போது வற்றிய நிலையில் உள்ளன.
காட்டுக்குள் வனத் துறையினரால் கட்டப்பட்டுள்ள மழை நீர் தடுப்பணைகளும், வறண்டு கிடக்கின்றன. இதனால், தண்ணீர் தேவை அதிகமுள்ள யானைகள் உள்ளிட்ட வன உயிர்கள், தாகத்தில் தவித்து, நீரைத் தேடி அலைகின்றன. வனத்தில் நீராதாரங்கள் வற்றி விட்டதால் தண்ணீரைத் தேடி ஊருக்குள் நுழைகின்றன. இதைத் தடுக்கும் வகையில், வன எல்லைகளில் தொட்டிகள் கட்டி, அதில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டாலும், அவை போதுமானதாக இல்லை.
தண்ணீர்த் தொட்டியை ஒரு சிறு யானைக் கூட்டமே காலி செய்துவிடுகிறது. “போதிய மழையின்மை மற்றும் கோடை வெப்பம் மட்டுமே காட்டில் உள்ள இயற்கையான வனக் குட்டைகள், நீரோடைகள், குளங்கள் வற்றுவதற்கு காரணம் அல்ல” என்று கூறும் இயற்கை நல ஆர்வலர்கள், “வன எல்லையோரங்களிலும், யானைகளின் வலசைப் பாதையை மறித்தும் கட்டப்பட்டுள்ள கேளிக்கை விடுதிகள், தொழில் நிறுவனங்கள், பண்ணை வீடுகள், உணவு விடுதிகள் போன்ற கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்க் கிணறுகளும் இதற்கு முக்கியக் காரணம்.
இங்கு, எவ்வித கட்டுப்பாடுமின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நீரோட்டம் பாதிக்கப்பட்டு, அருகில் உள்ள இயற்கையான வன நீராதாரங்கள் வறண்டுபோகின்றன. ஊற்றுகள் வற்றி, குளம், குட்டை மற்றும் ஓடைகளில் தண்ணீர் இருப்பதில்லை.
மேலும், கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வனப் பகுதியில் உள்ள நீராதாரங்களில் கலந்து, பாதிப்பை உருவாக்குகின்றன. காட்டை ஒட்டி ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர் உறுஞ்சுவதை முறைப்படுத்த வேண்டும்” என்றனர்.