

தருமபுரி நகரில் ஹெல்மெட் அணி யாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம் காவல் துறையினர் உறுதிமொழிக் கடிதம் பெறுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் விபத்து களையும், உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் இயக்கும்படி மாவட்ட காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இருசக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பகுதியினர் ஹெல்மெட் அணிந்து செல்வதை தவிர்த்து வருகின்றனர். எனவே, ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில் போலீஸார் அவ்வப்போது வாகன சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின்பேரில் தற்போது காவல் துறையினர் புதிய அணுகு முறையை கையாண்டு வருகின்ற னர். தருமபுரி நகரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத் தில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி நேற்று முதல் உறுதிமொழிக் கடிதம் பெறும் பணியை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.
தருமபுரி வள்ளலார் மைதானம் அருகில் நேற்று தருமபுரி டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற 681 பேரிடம் உறுதிமொழிக் கடிதம் பெற்றனர். இந்த கடிதத்தில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் இயக்கியவர்களின் பெயர், மொபைல் எண், வாகன பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிடுவதுடன், ‘இன்று நான் தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கினேன். இனி வருங்காலத்தில் தலைக்கவசம் அணிந்து தான் வாகனம் இயக்குவேன்' என்று கைப்பட எழுதி கையொப்பமிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு கடிதம் வழங்கிய பின்னர் அறிவுரைகளை கூறி வாகனங்களை போலீஸார் விடுவித்தனர்.
உறுதிமொழிக் கடிதம் அளித்த பின்னர் மறுமுறையும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்கி பிடிபட்டால் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். அடுத்தடுத்த முறைகளும் பிடிபட்டால் அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.