Published : 22 Jun 2019 03:40 PM
Last Updated : 22 Jun 2019 03:40 PM

தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

தமிழகத்தில் 1967-க்குப் பிறகு காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி அதிமுக சார்பில் சிறப்பு யாகம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"வெள்ளம் உள்ளிட்ட எந்தவொரு இயற்கை இடர்ப்பாடுகளையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது. மழை வேண்டி இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக சார்பில் யாகம் நடத்தப்பட்டிருக்கிறது. மழை நிச்சயமாகப் பொழியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆளுக்கொரு மரம் நட்டாலே தமிழகத்தில் 6 கோடி மரம் வளரும். இதனால், சுற்றுப்புறச் சூழல் குளிர்வடைந்து மழை பொழியும். அடுத்த தலைமுறை குறித்து சிந்திக்க வேண்டும். அதனால் ஒவ்வொருவரும் ஒரு மரம் நட வேண்டும். அப்படி செய்யும்போது சொல்ல முடியாத அளவுக்கு தமிழகத்தில் மழை பொழியும்", என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து யாகம் நடத்தினால் மழை வருமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எல்லாம் ஒரு நம்பிக்கைதான். அந்த நம்பிக்கைக்கு இறைவன் நிச்சயம் மழை பொழிவார். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வரும்போது பலர் விமர்சித்தனர். ஆனால், அதன் நன்மையை இப்போது உணர்ந்திருப்பார்கள். அத்திட்டத்தை இன்னும் பலப்படுத்தி துரிதப்படுத்த வேண்டும்.

தண்ணீர் பிரச்சினையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. அதனால் தான், இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இத்தகைய சூழ்நிலையிலும் சிறிய தெருக்களுக்குக் கூட லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கிறோம். இதனை பாராட்டி ஸ்டாலின் வாழ்த்துப்பா பாட வேண்டும். ஆனால் அவர் செய்வாரா? நாங்கள் திமுகவை எதிர்க்கட்சியாகப் பார்க்கிறோம். ஆனால், திமுக எங்களை எதிரிக்கட்சியாக பார்க்கிறது", என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

எத்தனை காலம்தான் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குவது என திமுக முன்னாள் அமைச்சர் கேள்விக்கு, "அது கூட்டணிக் கட்சிகளின் பிரச்சினை. அதில் நான் எந்த கருத்தும் சொல்லக்கூடாது. 1967-க்குப் பிறகு காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது", என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x