Last Updated : 26 Jun, 2019 05:52 PM

 

Published : 26 Jun 2019 05:52 PM
Last Updated : 26 Jun 2019 05:52 PM

சாலையில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்: நோயாளிக்கு ஜூஸ் தந்து மாற்று ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்த மக்கள், போலீஸார்

புதுச்சேரி சாலையில் 108 ஆம்புலன்ஸ் திடீரென்று பழுது ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கியர் பாக்ஸ் பழுதால் வாகனத்தை நகர்த்தவே முடியாத சூழலில் பொதுமக்கள், போலீஸார் மாற்று ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்ததுடன் ஆம்புலன்ஸில் நோயாளியுடன் வந்தோருக்கு உதவிகளும் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூரை சேர்ந்தவர் லட்சுமி (50). அவர் தைராய்டு பாதிப்பால் மூச்சு விட சிரமம் உண்டானது. இதையடுத்து 108 ஆம்புலன்சில் தனது மகன் ராம்குமார், மகள் பிரபாவதி ஆகியோருடன் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனை நோக்கி இன்று (புதன்கிழமை) மதியம் வந்தனர்.

அப்போது புதிய பஸ் நிலையம் அருகே திடீரென்று வாகனம் பழுதாகி சாலையின் குறுக்கே நின்றது. இதையடுத்து அவ்வழியே வாகனங்களில் சென்றோர் இறங்கி வந்து ஆம்புலன்ஸை தள்ளினர். ஆனால், ஆம்புலன்ஸ் நகரவே இல்லை. இதையடுத்து மாற்று ஆம்புலன்ஸூக்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வாகனம் பழுது பார்ப்போர் அங்கு வந்து வாகனத்தை பார்த்தபோது கியர் பாக்ஸ் பழுதாகியுள்ளதாகவும், வாகனத்தை இழுத்துதான் செல்ல முடியும் என்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சூழலில் எதிர்சாலையில் இருந்த உருளையன்பேட்டை காவல்நிலையத்திலிருந்து எஸ்பி மாறன், ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீஸாரும் அங்கு வந்தனர். போக்குவரத்து நெரிசலை சீராக்க துவங்கினர்.

இச்சூழலில் வாகனத்தில் வந்தோர் ஆம்புலன்ஸில் இருப்போருக்கு தேவையான உதவிகளை செய்யதொடங்கினர். தண்ணீர் மற்றும் ஜூஸ் வாங்கி தந்தனர். நீண்ட நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வராததால் விசாரித்தபோது, தைலாபுரம் பகுதியில் இருந்து வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இச்சூழலில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸை வரவழைத்து சிகிச்சை பெற வேண்டியோரை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x