Last Updated : 17 Jun, 2019 12:00 AM

 

Published : 17 Jun 2019 12:00 AM
Last Updated : 17 Jun 2019 12:00 AM

52 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் மூலம் டெல்டா மாவட்டங்களில் 88 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி: 3 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்

டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் இதுவரை 88,600 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இந்தாண்டு போதிய அளவு நீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. 1934-ம் ஆண்டு முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் நீர் இருப்பைப் பொருத்து தண்ணீர் திறக்கப்படும். 1942, 1945-ம் ஆண்டுகள் உட்பட சில ஆண்டுகள் மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2011-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்பிறகு 7 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதியோ அதற்கு முன்னதாகவோ தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்தாண்டு ஜூலை 19-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதுபோல இந்தாண்டும் தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகள் நிரம்பினாலோ அல்லது காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் கர்நாடக அரசு மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிட்ட பிறகோதான் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் சம்பா சாகுபடி 16.25 லட்சம் ஏக்கரிலும் குறுவை சாகுபடி 3 லட்சம் ஏக்கரிலும் நவரை சாகுபடி 1.25 லட்சம் ஏக்கரிலும் ஆக மொத்தம் 20.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காவிட்டாலும், காவிரி ஆற்றங்கரை மற்றும் வாய்க்கால் ஓரம் உள்ள பில்டர் பாயிண்ட்டிலும் (50 அடி வரை தண்ணீர் இருப்பதைக் குறிக்கும்), 50 அடிக்கு மேல் உள்ளவற்றைக் குறிக்கும் ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் குறுவை சாகுபடி நடைபெறும். அதன்படி, இந்தாண்டு இதுவரை 88,600 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஆழ்துளை கிணறுகளும் நாகை மாவட்டத்தில் 20 ஆயிரமும் திருவாரூரில் 15 ஆயிரமும் கடலூரில் 1,895 ஆழ்துளை கிணறுகளும் உள்ளன. குறுவையில் கோ 51, ஏடிடி 36, ஏடிடி 43, ஏடிடி 43 ஆகிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 2 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும். கடந்தாண்டு 3 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. இந்தாண்டும் அதே அளவு சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கடந்தாண்டு இதேநாளில் (ஜூன் 16) நீர்மட்டம் 39.94 அடி இருந்தது. இந்தாண்டு 45.53 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி. கடந்தாண்டு நீர் இருப்பு 12.05 டிஎம்சி. இந்தாண்டு 15.11 டிஎம்சி உள்ளது. இதே நாளில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளில் கடந்தாண்டு 25.49 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. இந்தாண்டு 23.31 டிஎம்சி இருப்பு உள்ளது.

காவிரி நீர் தட்டுப்பாடான காலங்களில் நதிநீர் பங்கீடுப்படி, தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடக அரசு ஜூன் மாதத்துக்குள் 9.19 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டும். இதை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் உத்தரவிட்டது. ஆனால், தங்களிடம் குடிநீருக்கே தண்ணீர் இல்லை என்று கூறி கர்நாடகம் கைவிரித்துவிட்டது.

இந்நிலையில், “காவிரி மேலாண்மை ஆணையம் வரும் 25-ம் தேதி மீண்டும் கூடுகிறது. அப்போது காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையம் மீண்டும் உத்தரவிடும். அதன்பிறகும் கர்நாடகம் பிடிவாதம் செய்தால், உச்ச நீதிமன்றத்தையும், மத்திய அரசையும் காவிரி மேலாண்மை ஆணையம் நாடும்” என்று பொதுப்பணித் துறை உயர் அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x